கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அத்திவரதர் பெருவிழாவின் 35-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்
கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அத்திவரதர் பெருவிழாவின் 35-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 இதுகுறித்து ஆட்சியர் மேலும் கூறியது: ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் நள்ளிரவு 12 மணி வரை தரிசன நேரத்தை நீட்டித்துள்ளோம்.
 தேவைப்பட்டால் இந்த நேரம் மேலும் கூடுதலாக்கப்படும். தரிசன நேரம் குறித்து பக்தர்களிடம் விசாரித்த போது இரண்டரை மணி நேரத்தில் சுவாமியை பொதுதரிசனப் பாதையில் சென்று தரிசிக்க முடிகிறது என்றும், கூட்டம் குறைவாக இருக்கும் நாள்களில் அரை மணி நேரத்தில் தரிசிப்பதாகவும் தெரிவித்தனர்.
 அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு போதுமான வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணிக்க ஏற்கனவே இரு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் அடிக்கடி கோயில் வளாகத்தில் ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
 தற்போது திருநெல்வேலி, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த இரு சார்-ஆட்சியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 காவல்துறையின் சார்பில் 46 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
 முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்கும் வகையில் 1,250 சக்கர நாற்காலிகள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 பேட்டரி கார்கள் அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் ஓய்வெடுக்கும் வகையில் இரு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 20 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
 திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்துக்கு பக்தர்கள் நிதியுதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது, கண்காணிப்பு அதிகாரிகள் கே.பாஸ்கரன், என்.சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.
 இதைத் தொடர்ந்து, கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் பா.பொன்னையா, சார்-ஆட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com