சுடச்சுட

  


  தேசத்தின் ஒற்றுமைக்காக கடந்த 3 ஆண்டுகளாக தினசரி தனது ஜவுளிக்கடையில் தேசியக்கொடியை ஏற்றி வருகிறார் காஞ்சிபுரம் சிவனடியார் திருக்கூட்டத்தின் துணைத்தலைவரான எஸ்.பூவேந்திரன்.
  காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிர்புறத்தில் காமராஜர் சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார் எஸ்.பூவேந்திரன்(52). காஞ்சிபுரம் மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத்தின் துணைத்தலைவரான இவர், கடந்த 3 ஆண்டுகளாக தினசரி தனது ஜவுளிக்கடையின் மாடியில் தேசியக் கொடியை ஏற்றி வருகிறார்.
  இது குறித்து எஸ்.பூவேந்திரன் கூறியது: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு எதிரான உயரமான கட்டடத்தில் எனது ஜவுளிக்கடை உள்ளது. கட்டடத்தின் உச்சியில் தினசரி தேசியக் கொடியை ஏற்றி மாலையில் இறக்குகிறோம்.
  பெரும்பாலும் நானே இப்பணியை செய்வேன். நான் இல்லாத நேரத்தில் இப்பணியை முறையாகச் செய்ய இதற்கென 3 பணியாளர்களை நியமித்துள்ளேன். அவர்கள் கொடி ஏற்றும் நேரம், சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாக கொடி இறக்கும் நேரம் ஆகியனவற்றை முறையாக  பேரேட்டில் பதிவு செய்து கையெழுத்து போட்டு விடுவார்கள்.
  மக்களிடம் தேசப்பற்று, ஒற்றுமை உணர்வு ஆகியன குறைந்து கொண்டே வருகிறது.மக்களிடம் தேசப்பற்றை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இப்பணியை தொடர்ந்து 3 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.  தேசியக் கொடியை பொது இடங்களிலும் ஏற்றலாம் என அரசு அறிவித்ததையடுத்து தினசரி எனது ஜவுளிக்கடையில் தேசியக் கொடியை ஏற்றி  இறக்குகிறேன்.
  எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்ததால்  தான் நமது தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எனவே தேசப்பற்று ஏற்பட வேண்டும் என்பதற்காகவே தேசியக்கொடியை ஏற்றி வருகிறேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai