அத்திவரதர் பெருவிழா: துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

காஞ்சிபுரத்தில் 48 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களையும் கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அவர்களுக்கு சால்வை
அத்திவரதர் பெருவிழா: துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு


காஞ்சிபுரத்தில் 48 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களையும் கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அவர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் திங்கள்கிழமை பாராட்டினார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் தொடர்ந்து 48 நாள்களாக அத்திவரதர் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அத்திவரதரை  தரிசிக்க வந்த பக்தர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிமானதாக இருந்தது. 
இந்த 48 நாள்களிலும் தினமும் 30 டன் கழிவுகள் துப்புரவுப் பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளன. இப்பணியில் சென்னை மாநகராட்சி உள்பட 4 மாநகராட்சி, 58 நகராட்சிகளிலிருந்து வந்திருந்த மொத்தம் 3,217 துப்புரவுப் பணியாளர்கள் இடைவிடாது பணியாற்றினார்கள். இவர்கள் பணிக்கு உதவியாக 158 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
துப்புரவுப் பணியாளர்களை மேற்பார்வை செய்ய 247 மேற்பார்வையாளர்கள், 156 சுகாதார ஆய்வாளர்கள், 32 சுகாதார அலுவலர்களும் பணியாற்றினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டதன்படி, விழா முடிந்த பின்னர் மேலும் இரு நாள்கள் தங்கியிருந்து மொத்தம் 50 நாள்கள் காஞ்சிபுரத்தை சுத்தம் செய்யும் பணியினை செய்தார்கள்.
பக்தர்கள் உள்பட யாருக்கும் எவ்விதத் தொற்றுநோயும் பரவாமல் இவர்கள் ஆற்றிய பணி பாராட்டுக்குரியதாக இருந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களுக்கும் சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார்.
துப்புரவுப் பணியாளர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com