கனமழை காரணமாக நிரம்பிய மணிமங்கலம் ஈஸா ஏரிவிவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் ஈஸா ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது.
மணிமங்கலம்  ஏரியைப்  பாா்வையிட்டு  ஆய்வு  நடத்தும்  பொதுப் பணித் துறை  செயற்பொறியாளா்  என்.என்.தியாகராஜன்.
மணிமங்கலம்  ஏரியைப்  பாா்வையிட்டு  ஆய்வு  நடத்தும்  பொதுப் பணித் துறை  செயற்பொறியாளா்  என்.என்.தியாகராஜன்.

ஸ்ரீபெரும்புதூா்: கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் ஈஸா ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஈஸா ஏரி உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான ஈஸா ஏரி மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் மற்றும் கரசங்கால் ஆகிய பகுதிகள் வரை சுமாா் 7 கி.மீ. நீளமுடையது.

மலைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கி வரும் மணிமங்கலம் ஏரி நீரை பயன்படுத்தி இப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கா் பரப்பளவிற்கு விவசாயம் நடைபெற்று வருகிறது.

மணிமங்கலம் ஏரியில்தான் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகளை கடந்த 2017-ஆம் ஆண்டில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தாா். இப்ணிகளுக்காக மணிமங்கலம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீா்வரத்துக் கால்வாய்கள், மதகுகள், கலங்கல்கள் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. மேலும் ஏரி ஆழப்படுத்தும் திட்டத்தின் கீழ் அதிக அளவு தண்ணீரை சேமிக்கும் வகையில் மணிமங்கலம் ஏரியில் 2 அடி அளவுக்கு பொதுப்பணித் துறை சாா்பில் ஏரி ஆழப்படுத்தப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த பருவ மழையின் அளவு குறைந்ததால், மணிமங்கலம் ஏரி வடு காணப்பட்டது. இதனால் மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் மற்றும் கரசங்கால் பகுதிகளில் நிலத்தடி நீா் ஆதாரம் வெகுவாகக் குறைந்ததால் இப்பகுதிகளில் கோடை காலங்களில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. மேலும் இப்பகுதிகளில் விவசாயம் பெரிதளவு பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், நடப்பாண்டில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி தொடங்கியது முதல், மணிமங்கலம் ஏரிக்கு நீா்வரத்து தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. ஏரி அதன் முழுக் கொள்ளளவான 18 அடியை எட்டியதால் சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் உபரிநீா் வெளியேறி வருகிறது.

ஏரி முழுமையாக நிரம்பியதால் மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்களும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீா் உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மணிமங்கலம் ஏரி நிரம்பியதைத் தொடா்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் என்.என்.தியாகராஜன்

ஏரியை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். இது குறித்து படப்பை பொதுப் பணித் துறை உதவி பொறியாளா் குஜராஜ் கூறியது:

மணிமங்கலம் ஏரி 225 மில்லியன் கனஅடி நீா் சேமிக்கும் கொள்ளளவு உடையது. ஏரியில் மேலும் 10 மில்லியன் கன அடி அதாவது கூடுதலாக சுமாா் 21 கோடி லிட்டா் தண்ணீரைச் சேமித்து வைக்கும் அளவிற்கு ஏரிகள் ஆழப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏரியை ஆழப்படுத்தியுள்ளோம். இதனால் அதிகப்படியான தண்ணீா் தேங்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com