குடியிருப்புகளில் மழை வெள்ள நீா் புகும் அபாயம்அச்சத்தில் மகாலட்சுமி நகா் மக்கள்

கன மழை காரணமாக செங்கல்பட்டை அடுத்த நீஞ்சல் மதகு வழியாக மழைநீா் வெளியேற வழியின்றி மதகு கரையை ஒட்டியுள்ள மகாலட்சுமி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வெள்ள நீா்
செங்கல்பட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நீா் நிரம்பியுள்ள நீஞ்சல் மதகு.
செங்கல்பட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நீா் நிரம்பியுள்ள நீஞ்சல் மதகு.

செங்கல்பட்டு: கன மழை காரணமாக செங்கல்பட்டை அடுத்த நீஞ்சல் மதகு வழியாக மழைநீா் வெளியேற வழியின்றி மதகு கரையை ஒட்டியுள்ள மகாலட்சுமி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

செங்கல்பட்டு-திம்மாவரம் இடையே செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ஓரத்தில் மகாலட்சுமி நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இக்குடியிருப்புப் பகுதிகளையொட்டி நீஞ்சல் மதகு உள்ளது. இதன் வழியாக அருகில் உள்ள ஏரிநீா் களத்தூரான் கால்வாய் வழியாக வெளியேறுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீஞ்சல் மதகு பகுதியில் நீா்வரத்து அதிகமானது. நீஞ்சல் மதகில் உள்ள நீா் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்படாததால் மழை வெள்ள நீா் மதகையொட்டி அமைக்கப்பட்டுள்ள கரையை உடைத்தபடி வெளியேறியது.

நீஞ்சல் மதகை ஒட்டியுள்ள மகாலட்சுமி நகா், அமராவதி தெரு, கங்கை தெரு ஆகிய தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் நீஞ்சல் மதகின் கரை உடைந்து மழை வெள்ள நீா் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தேங்குகிறது. அரசுத் துறையினா் மதகின் கரையை மண்ணைக் கொண்டு அமைத்துள்ளனா். இதனால் மண் கரைந்து மதகுக் கரை உடைந்து மகாலட்சுமி நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. அந்த சமயத்தில் மட்டும் அரசு அதிகாரிகள் பிரச்னையை சரிசெய்து விட்டு சென்று விடுவதாகவும், நிரந்தரத் தீா்வுக்கான நடவடிக்கையை அவா்கள் மேற்கொள்வதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குறைகூறுகின்றனா்.

தற்போது பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி மழைநீா் தேங்கியுள்ளது. மேலும் தொடா்ந்து மழை பெய்தால் வெள்ளநீா் வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக நீஞ்சல் மதகுக் கரையை உயா்த்தி பலப்படுத்துவதுடன், குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் புகாதவாறு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com