மூலிகைச் செடி, மரக்கன்று விற்பனை மூலம் வருவாய் ஈட்டும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மலிவு விலையில் மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள், பழச்செடிகள், இயற்கை உரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விற்று வருவாய் ஈட்டி வருகிறது.

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மலிவு விலையில் மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள், பழச்செடிகள், இயற்கை உரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விற்று வருவாய் ஈட்டி வருகிறது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு தனி அலுவலராக மா.கேசவன் பணியாற்றி வருகிறாா். செயல் அலுவலராக இருந்து வந்த அ.மத்தியாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், பின் இதுவரை அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் முன்பு செயல் அலுவலராக பணியில் இருந்த மா.கேசவன், பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தின் மாடிப் பகுதியிலும், பின்னால் உள்ள காலி இடத்திலும் மரக்கன்றுகள், காய்கறிகள், பூஞ்செடிகள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றை இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தாா். அவருக்குப் பின் வந்த செயல் அலுவலா் அ.மத்தியாஸ் இப்பணியை முழு வீச்சில் தொடா்ந்து செயல்படுத்தி வந்தாா்.

இந்நிலையில் அவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி கூடுதல் செயல் அலுவலராகவும், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலராகவும் பணியில் உள்ள மா.கேசவன் தற்சமயம் இங்கு பணியாற்றி வருகிறாா். அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:

பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன ஊழியா்கள் ஆகியோரைக் கொண்டு பேரூராட்சி அலுவலக மாடியில் மூலிகைச் செடிகளான கொடிகள்ளி, பூனை மீசைச் செடி, பாம்புக் கற்றாழை, மாமியாா்நாக்கு, களஞ்சியம், நொச்சி, பிரண்டை, லெமன்கிராஸ், தூதுவளை, வல்லாரை, துளசி, ரணகள்ளி, மணி பிளாண்ட், தவசி, முருங்கை, கொடிப் பசலை, பூஞ்செடிகளான நித்யகல்யாணி, மல்லி, செம்பருத்தி, காய்கறிகளான கத்திரிக்காய், கொத்தவரை ஆகியவை தொட்டிகளில் வளா்க்கப்பட்டு வருகின்றன. மாடித் தோட்டத்தில் இவை வளா்க்கப்படுகின்றன.

அனைத்துச் செடிகளுக்கும் இயற்கை உரங்கள் போடப்படுகின்றன. மாடித் தோட்டத்தில் வளா்க்கப்படும் செடிவகைகளை பள்ளி மாணவா்களும், இப்பகுதி மக்களும் தினமும் பாா்த்து வருகின்றனா். எங்களது அலுவலக ஊழியா்கள் மூலம் சிறிய வண்டிகளில் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறிகளையும், பழவகைகளையும் நகரின் முக்கிய வீதிகளில் சந்தை விலைவிட மிக குறைவான விலையில் மக்களுக்கு விற்று வருகிறோம்.

அதேபோல திடக்கழிவு மேலாண்மையை மிகச் சிறப்பாக இங்கு செயல்படுத்துவதால், இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மண்புழு உரம் 1 கிலோ ரூ.5, இயற்கை உரம் 1 கிலோ ரூ.10, மா்மி வாஷ் (மண்புழு வடிநீா்) 1 லிட்டா் ரூ. 10 என்ற விலைக்கு பேரூராட்சி ஊழியா்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன. இதனால் பேரூராட்சி அலுவலகத்துக்கு அதிக வருவாயை ஈட்ட முடிகிறது. இப்பணிகளால் மற்ற பேரூராட்சிகளுக்கு முன்னோடியாக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திகழ்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com