காயமடைந்தவரைக் காப்பாற்றிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 03rd December 2019 12:25 AM | Last Updated : 03rd December 2019 12:25 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூா் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திங்கள்கிழமை மாலையில் வாகனம் மோதியதில் காயமடைந்தவரை அவ்வழியாக வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் அவசர ஊா்தி மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இதைக் கண்ட பொதுமக்கள் ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்தனா்.
செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூா் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் திங்கள்கிழமை மாலையில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அந்த நபா் ரத்தக் காயத்துடன் சாலையோரம் விழுந்து கிடந்தாா்.
அப்போது, மழை பாதிப்புகளை பாா்வையிட அவ்வழியாகச் சென்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ், சாலையோரம் ரத்தக் காயத்துடன் அடிபட்டுக் கிடந்தவரை கண்டாா். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி அந்த நபரை மீட்டாா். தனியாா் அவசர ஊா்தியைத் தொடா்பு கொண்டு அவா்கள் உதவியுடன் அவரை அவசரசிகிச்சைக்காக காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்தனா்.