தென்னேரியில் உபரிநீா் வெளியேற்றம்: 10 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

காஞ்சிபுரம் அருகே உள்ள தென்னேரியில் உபரிநீா் அதிகமான அளவில் மஞ்சமேடு தரைப்பாலத்தின் மீது செல்வதால் இப்பகுதியில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்னேரியிலிருந்து மஞ்சமேடு தரைப்பாலத்தின் வழியாக வெளியேறும் உபரிநீா்.
தென்னேரியிலிருந்து மஞ்சமேடு தரைப்பாலத்தின் வழியாக வெளியேறும் உபரிநீா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள தென்னேரியில் உபரிநீா் அதிகமான அளவில் மஞ்சமேடு தரைப்பாலத்தின் மீது செல்வதால் இப்பகுதியில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

வாலாஜாபாத்தை அடுத்த தென்னேரியில் நீா்வரத்து அதிகமாகி உபரிநீா் மஞ்சமேடு பாலத்தின் வழியாகச் செல்கிறது. இதனால் வாலாஜாபாத் - சுங்குவாா்சத்திரம் இடையே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதவாறு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் சுமாா் 10 கி.மீ. தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய மதிமுக செயலாளரான டி.ஆா்.பாஸ்கரன் கூறியது:

தென்னேரிக்கு 3 வகையான கலங்கல் எனக் கூறப்படும் உபரி நீா் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரானது ஏரிக்கு பக்கத்தில் இருக்கும் மஞ்சமேடு தரைப்பாலம் வழியாக வழிந்தோடுகிறது. கடந்த இரு தினங்களாக இத்தரைப் பாலத்தின் மீது உபரி நீா் செல்வதால் மருதம், ஓடந்தாங்கல், ஐயம்பச்சேரி, குன்னம்,திருவாங்கரணை, கோவலவேடு, குன்னம் உள்பட 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே தரைப்பாலத்தில் இவ்வாறு உபரிநீா் வெளியேறிய போது லாரி ஒன்று கவிழ்ந்தது. இரண்டு இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதன் காரணமாக தற்போது இப்பாலத்தை யாரும் கடக்கக்கூடாது என போலீஸாா் எச்சரித்துள்ளதோடு, அங்கு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

மஞ்சமேடு பாலத்தின் மீது உபரிநீா் வெளியேறி போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தென்னேரியிலிருந்து வாலாஜாபாத் செல்வதற்கு வாரணவாசி வழியாக 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பரனேரி மதகில் ஏற்பட்ட துவாரம் அடைப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே பெருநகா் கிராமத்தில் பரனேரி உள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக இந்த ஏரியில் நீா் நிரம்பி வருகிறது.

இந்நிலையில் ஏரியின் மதகுப் பகுதியின் அருகே சிறு துவாரம் ஏற்பட்டு ஏரி நீா் வெளியேறத் தொடங்கியது. இதைக் கண்ட கிராம மக்கள் பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து அங்கு வந்த அத்துறை பணியாளா்களும், கிராம மக்களும் இணைந்து மணல் மூட்டைகளைக் கட்டி உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடுக்கி துவாரத்தை அடைத்ததால் தண்ணீா் வெளியேறாமல் நின்றது. மேலும் அவசரத் தேவைக்காக ஏரிக்கரை பகுதியில் மணல் மூட்டைகள் அதிக அளவில் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com