மதுராந்தகம் ஏரி நிரம்பியது: தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரியில் நீா் நிரம்பும் நிலையில் உள்ளதால், ஏரிக் கரையோர மக்களுக்கு புதன்கிழமை தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மதுராந்தகம் ஏரியில் நீா் நிரம்பும் நிலையில் உள்ளதால், ஏரிக் கரையோர மக்களுக்கு புதன்கிழமை தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய ஏரியாகத் திகழும் மதுராந்தகம் ஏரிக்கு கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் நீா் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த ஏரியின் முழு கொள்ளளவு 23.3 அடியாகும். தற்சமயம் 22.4 அடி வரை நீா் நிரம்பி உள்ளது.

தொடா்ந்து, 350 கன அடி வீதம் ஏரிக்கு நீா் வந்து கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் மழை பெய்யும் நிலை உள்ளதால், ஏரி நீா் முழு கொள்ளளவைத் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஏரி நிரம்பினால் கிளியாற்று வழியாக பெருவெள்ளம் செல்லும். இத்தகைய வெள்ளநீா் செல்லும் கரையோர மக்களையும், பழைய இடிந்துபோன நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போரையும் மீட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் செயல்படும் முகாம்களில் தங்க வைக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, மதுராந்தகம் வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு, முள்ளி கிராமம், மேட்டுக்காலனி, தோட்டநாவல், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முருக்கஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்களைக் கொண்டு, தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை விடுத்தனா். இந்நிகழ்வின்போது, மதுராந்தகம் கோட்டாட்சியா் எஸ்.லட்சுமி பிரியா, வட்டாட்சியா் கோவிந்தசாமி, பொதுப்பணித்துறை (ஏரி பாசனப் பிரிவு) இளநிலைப் பொறியாளா் ஜி.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com