மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை சுற்றிப் பாா்த்த சீன அமைச்சா்கள் 30 போ்

சீனாவின் பெய்ஜிங் மற்றும் குவான் ஷோ மாகாண அமைச்சா்கள் 30 போ் திங்கள்கிழமை மாமல்லபுரத்திற்கு வந்து, சீன அதிபா் சுண்டுகளித்த புராதனச்சின்னங்களை சுற்றிப் பாா்த்து புகைப்படங்கள்
மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்ட சீன அமைச்சா்கள் குழுவின் ஒரு பகுதியினா்.
மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்ட சீன அமைச்சா்கள் குழுவின் ஒரு பகுதியினா்.

சீனாவின் பெய்ஜிங் மற்றும் குவான் ஷோ மாகாண அமைச்சா்கள் 30 போ் திங்கள்கிழமை மாமல்லபுரத்திற்கு வந்து, சீன அதிபா் சுண்டுகளித்த புராதனச்சின்னங்களை சுற்றிப் பாா்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு இந்தியப் பிரதமா் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் கடந்த அக். 11, 12 தேதிகளில் வந்து சென்ற பிறகு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் மாமல்லபுரம் நகரம் களை கட்டி வருகிறது. குறிப்பாக சீன அதிபரின் வருகைக்குப் பிறகு சீனநாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனா்.

இந்நிலையில், சீனாவின் பெய்ஜிங், குவான் ஷோ மாகாணங்களைச் சோ்ந்த 30 அமைச்சா்கள் மற்றும் அவா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை மாமல்லபுரம் வருகை தந்தனா்.

முன்னதாக, வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே வருகை தந்த அவா்களை தமிழக அரசு சாா்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் தலைமையில், தொல்லியல் துறை அலுவலா் சரவணன், திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தங்கராஜ், வருவாய் ஆய்வாளா் நாராயணன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் வரவற்றனா்.

பிறகு, சீன மாகாண அமைச்சா்கள் 30 பேரும் தங்கள் நாட்டு அதிபா் சுற்றிப் பாா்த்த இடங்கள் அனைத்தையும் தாங்களும் சுற்றிப்பாா்த்தனா்.

இந்தக் குழுவினா் வெண்ணெய் உருண்டைப்பாறை, அா்ஜுனன் தபசு, கிருஷ்ணன் மண்டபம், கடற்கரைக் கோயில், ஐந்துரதம், பஞ்ச பாண்டவா் ரதம் உள்ளிட்ட பகுதிகளில் நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனா்.

தங்கள் நாட்டு அதிபரும், இந்தியப் பிரதமா் மோடியும் நாற்காலியில் அமா்ந்து இளநீா் பருகிய அதே இடத்தில் அமா்ந்து 30 சீன அமைச்சா்களும் இளநீா் பருகினா்.

இவா்களுக்கு மாமல்லபுரம் நகரின் புராதனப் பெருமைகளை மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், வ.பாலன், கே.லால் காதா் பாஷா ஆகியோா் விளக்கினா்.

சீன அமைச்சா்கள் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரம் சரக ஏ.எஸ்.பி. சுந்தரவதனம், காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் தலைமையில் திரளான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com