இளைஞர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

இளைஞரின் தற்கொலைக்கு காரணமான போலீஸார் மற்றும் வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  


இளைஞரின் தற்கொலைக்கு காரணமான போலீஸார் மற்றும் வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
 செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 2018 அக்டோபரில் இருதரப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருதரப்பு மாணவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து கிராமிய போலீஸில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து,  மறு தரப்பினர் மீது கொலைமுயற்சி மற்றும் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புலிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (22) உள்பட பத்துபேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர், ஜெயக்குமார் ஜாமீன் பெற்று, காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டுவந்தார். அப்போது தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி போலீஸார் ஜெயக்குமாரிடம் கேட்டார்களாம். அதற்கு ஜெயக்குமார் மறுத்துள்ளார்.  
இதைத் தொடர்ந்து, கிராமிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மற்றும் புலிப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆகியோர் இரவு நேரங்களில் ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று மிரட்டினார்களாம். இதனால் மனமுடைந்த நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து, ஜெயக்குமாரின் தற்கொலைக்கு காரணமான கிராமிய காவல் ஆய்வாளர் மற்றும் வழக்குரைஞர்  ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று கூறி சென்னை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஜெயக்குமாரின் உறவினர்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து வந்த வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, டிஎஸ்பி கந்தன், கிராமிய காவல் ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
பின்னர், அவர்களின் கோரிக்கையை ஏற்று, வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com