முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மார்ச் 6-இல் பிரதமர் மோடி வருகை: பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட துணை முதல்வர்
By DIN | Published On : 28th February 2019 04:10 AM | Last Updated : 28th February 2019 04:10 AM | அ+அ அ- |

பிரதமர் மோடி வரும் மார்ச் 6-இல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, கூடுவாஞ்சேரியை அடுத்த கிளாம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புதன்கிழமை பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான இடத்தை பார்வையிடுவதற்காக வந்த அவருடன், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் வந்தனர்.
வரும் மார்ச் 6-இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏற்கெனவே பிரதமர் மோடி தமிழகத்தில் மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இருந்தும் முறையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
அதிமுக - பாஜக கூட்டணி உருவான பின்பு, முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர்-கிளாம்பாக்கத்தில் வரும் புதன்கிழமை (மார்ச் 6) நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர்அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
கூட்டணி தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுவதால் இந்தக் கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டம் நடக்க இருக்கும் இடத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பென்ஜமின், தங்கமணி உள்ளிட்டோர் புதன்கிழமை பிற்பகல் பார்வையிட்டனர்.
முன்னதாக, கிளாம்பாக்கத்துக்கு வருகை தந்த துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை, மாவட்டச் செயலர்கள் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், முன்னாள் மக்களவை உறுப்பினர் காஞ்சி. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் தனபால், பி.கணேசன் உள்ளிட்டோர் மலர்க் கொத்து அளித்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஞானமூர்த்தி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செந்தில் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் பொதுக்கூட்ட மேடை அமைத்தல், பிரதமர் வந்து இறங்கும் ஹெலிகாப்டரை நிறுத்தும் இடத்தை தேர்வு செய்தல் போன்ற ஏற்பாடுகள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கூட்டம் நடைபெறும் இடத்தின் வரைபடத்தை ஓபிஎஸ் பார்வையிட்டார். இதையடுத்து, கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார். துணை முதல்வர் வருகையையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.