பழக்கிடங்குகள் அமைக்க ரூ. 1.75 கோடி மானியம்

பழக்கிடங்குகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் மொத்தம் ரூ.1.75 கோடி வரை மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை


பழக்கிடங்குகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் மொத்தம் ரூ.1.75 கோடி வரை மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், மலர்கள்,  மூலிகைகள் மற்றும் மலைத் தோட்டப் பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்யும் மிகப்பெரிய சந்தையாக சென்னை விளங்குகிறது. ஒருசில பருவங்களில் உற்பத்தி அதிகரிப்பதால் சந்தையில் விளைபொருள்கள் குவிந்து விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால், விளைபொருள்களை விவசாயிகள் வெளியில் கொட்டி அழிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து விளைபொருள்களும் அதிகமாக விளையும் காலங்களில் குளிர்பதனக் கிடங்குகள் அமைத்து, நீண்ட நாள்கள் சேமிக்க தோட்டக்கலைத் துறை சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைப்போருக்கு அரசு தேசிய தோட்டக் கலை இயக்கம் மூலம் மானியம் வழங்குகிறது. அதன்படி, 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள குளிர் பதனக் கிடங்குகள் அமைப்பதற்கு அதிகபட்சமாக 35 சதவீத மானியமாக ரூ.1.75 கோடி வழங்கப்படுகிறது. மேலும், வரும் நிதி ஆண்டு 2019-20 இல், பின் செய் நேர்த்தி மேலாண்மை திட்டம் சார்பில் சிப்பம் கட்டும் அறை, குளிர் பதனக் கிடங்கு, ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை போன்றவையும் செயல்படுத்தப்படவுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னைக்கு மிக அருகில் உள்ளதால் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை வாங்கி சேமிக்கலாம். அத்துடன், விற்பனைக்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளும் அமைந்துள்ளன. எனவே, இவ்வசதிகளைப் பயன்படுத்தி தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் கிடங்குகளை அமைக்க  விரும்புவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். பின்னர், வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com