தினமணி செய்தி எதிரொலி: முடங்கிய மேம்பாலப் பணி: இம்மாத இறுதிக்குள் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அதிகாரி தகவல்
By DIN | Published On : 04th January 2019 03:16 AM | Last Updated : 04th January 2019 03:16 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் மீது 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடையாமல் முடங்கியிருந்த நிலையில், அதை விரைந்து முடிக்கும் வகையில் மீண்டும் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.
கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து மாமல்லபுரத்துக்கு செல்லும் நுழைவுப் பகுதியில் இக்கால்வாய் மீது ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்துக்கு மாற்றாக புதிய மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தரைப்பாலம் குறுகியதாக அமைந்துள்ளதை அடுத்து வாகனங்களின் போக்குவரத்துக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவது இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. மழைக் காலங்களில் இந்தப் பாலம் நீரில் மூழ்கிவிடும் நிலையில், பாதசாரிகள் கூட பாலத்தைப் பயன்படுத்த முடியாது. வாகனங்கள் மாற்றுவழியாக புறவழிச்சாலையைப் பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு பழைய பாலத்துக்கு அருகிலேயே புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்புதலை அளித்து ஒப்பந்தப் புள்ளி கோரியது.
2007-ஆம் ஆண்டு ஜூலை 25-இல் புதிய பாலத்தை ரூ.4 கோடியில் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட தனியார் நிறுவனம் திட்டக் காலம் கடந்தும் 25 சதவீதப் பணியை மட்டுமே நிறைவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து மீதமுள்ள பணியை முடிக்க நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் பலமுறை ஒப்பந்தப் புள்ளி கோரியும் யாரும் அத்திட்டப் பணியை ஏற்க முன்வரவில்லை.
இந்நிலையில், மற்றொரு தனியார் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.6.31 கோடியில் இப்பணியை நிறைவு செய்ய ஒப்படைக்கப்பட்டு மீண்டும் கட்டுமானப் பணி 2016-இல் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் அப்பணி நிறைவடையாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் மீதும், திட்டப் பணியை மேற்கொண்டவர்கள் மீதும் எழுப்பினர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்ததாரர் பணியை தாமதம் செய்து வருவதாகவும், மேம்பாலப் பணியையொட்டி, ஏரிமண் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.3.30 கோடி ஒப்பந்தப்புள்ளி மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு அப்பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்த செய்தி தினமணியில் டிசம்பர் 29-ஆம் தேதியிட்ட நாளிதழில் வெளிவந்தது. இந்நிலையில், மேம்பாலப் பணிகள் மீண்டும் அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதைக் கண்டு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செந்தில் கூறியது: இத்திட்டப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது தொடங்கியுள்ள பணி தீவிரப்படுத்தப்பட்டு இம்மாத இறுதிக்குள் உறுதியாக முடிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...