சுடச்சுட

  
  pongal


  சங்கரா பல்கலை., கலை அறிவியல் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
  காஞ்சிபுரத்தை அடுத்த சங்கரா பல்கலைக்கழகம், கணினி அறிவியல் பயன்பாட்டுத் துறை, தமிழ்த் துறை சார்பில், சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பல்கலைக்கழக துணை வேந்தர் விஷ்ணுபோத்தி, பதிவாளர் ஸ்ரீனிவாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு, விழாவைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள் பாரம்பரிய முறையில் பானை, கரும்பு வைத்து, பொங்கல் வைத்து, விழாவை கொண்டாடினர். பின்னர், சிலம்பம், கயிறு இழுத்தல், உறியடி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பல்கலை. முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வேணுகோபால், துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். 
  அதுபோல், சங்கரா கலை,அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சார்பில், சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து, விழாவைத் தொடங்கி வைத்தார். இதில், பேராசியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


  வித்யாசாகர் குளோபல் பள்ளியில்...
   செங்கல்பட்டு, வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் குளோபல் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ்சுரானா, நிர்வாகிகள் சுரேஷ்கன்காரியா, பி.ஜி. ஆச்சாரியா, பள்ளி முதல்வர் கல்பனா பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு வட்டாட்சியர் வி.பாக்கியலட்சுமி பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். 
  தொடர்ந்து, பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். பின்னர், நடைபெற்ற நாட்டிய விழா, கிராமிய கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேலும், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது.
  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  வெங்காடு அரசுப் பள்ளியில்...
   ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் கல்யாணி தலைமை வகித்தார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபட்டனர். 
  இதில், வெங்காடு முன்னாள் ஊராட்சித் தலைவர் உலகநாதன், மண்டலத் துணை வட்டாட்சியர் பூபாலன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai