சுடச்சுட

  
  kancollectorpong

  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை சுகாதாரப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
   விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி முன்னிலை வகித்தார். விழாவில், அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
   தொடர்ந்து, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொங்கல் பானை வைத்து வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு பொங்கல் வைத்தனர். அதை சூரிய பகவானுக்குப் படையலிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டாடினர்.
   விழாவில், ஆட்சியர் உள்பட அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வகையில் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவருக்கும் துணிப்பையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கி ஆட்சியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாராயணன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
   பள்ளிகளில்...
   சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை தொடக்கம், பொங்கல் விழா, பள்ளியின் 85-ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   பள்ளித் தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்மொழி, அரிமா சங்க நிர்வாகி அன்பு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, மாணவர் காவல் படையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பின்பு, ஆசிரியர்கள், மாணவர்களுடன் சேர்ந்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் (ஓய்வு) பூர்ணசந்திரன் கலந்துகொண்டு, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். அத்துடன், முதலிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசளிப்பதற்கு, ரூ. 10 ஆயிரம் அறக்கட்டளைத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
   மதுராந்தகத்தில்...
   மதுராந்தகம் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
   விழாவுக்கு கல்லூரி முதல்வர் வி.சுபத்ரா தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். அப்போது புதுப் பானைகளில் வண்ணமிட்டு, பொங்கல் வைத்து, விழாவைக் கொண்டாடினர். இதையடுத்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
   ஆதிபராசக்தி கல்லூரியில்...
   மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
   நிகழ்ச்சியில், பங்கேற்க வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பல வண்ணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 21 புதிய பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி அறங்காவலர் கோ.ப.அன்பழகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கோலப்போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai