காஞ்சிபுரத்தில் களைகட்டும் பொங்கல் சந்தை

பொங்கல் பண்டிகையையொட்டி காந்திசாலை உள்ளிட்ட காஞ்சிபுரம் நகர்ப் பகுதி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
காஞ்சிபுரத்தில் களைகட்டும் பொங்கல் சந்தை

பொங்கல் பண்டிகையையொட்டி காந்திசாலை உள்ளிட்ட காஞ்சிபுரம் நகர்ப் பகுதி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர். வரும் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, காஞ்சிபுரம் ராஜாஜி, ஜவஹர் உள்ளிட்ட காய்கறி அங்காடி வளாகங்களில் கடந்த ஓரிரு நாள்களாக பொதுமக்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. போகிப் பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ள போகி மேளம் ரூ. 30-40 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி அங்காடிகளில் மொச்சை, பூசணி, சிறு, பெரு வள்ளிக் கிழங்கு வகைகள் அதிக அளவில் வந்துள்ளன. மேலும், காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து திரளானோர் புத்தாடை வாங்க காந்தி சாலை, காமராசர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடை, பட்டுக் கடைகளில் முகாமிட்டுள்ளனர். அதேபோல், ஏழை எளியோர் சாலையோரக் கடைகளில் சிறு வியாபாரிகளிடம் வாங்கி வருகின்றனர்.
 மேலும், பொங்கல் பண்டிகையின் முக்கிய அடையாளமாக கரும்பு விளங்கிறது. இதற்காக, மொத்த, சில்லைறை வியாபாரிகள் சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில், கரும்பு ஒரு ஜோடி ரூ. 40-60 வரை விற்பனையானது.
 ஆனால், சூறாவளிக் காற்றில் கரும்பு சாய்ந்தது, போதிய மழையின்மையால் விளைச்சல் குறைவு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் நிகழாண்டு ரூ. 70 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
 அதேபோல், பொங்கல் வைப்பதற்கு முக்கியப் பொருளாக விளங்கும் பொங்கல் பானை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. காஞ்சிபுரம் மேட்டுத் தெரு, பச்சையப்பன் சாலை, நெல்லுக்காரத் தெரு, சின்ன காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. கோ-ஆப்டெக்ஸ், காதி கிராப்ட் உள்ளிட்ட அரசு, தனியார் பட்டு, ஆடை விற்பனைக் கடைகளில் தள்ளுபடி விற்பனை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
 போக்குவரத்து நெரிசலால் அவதி: மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் வெள்ளம் அதிகரித்துள்ளதால், வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது. இதனால், காந்தி சாலை, பேருந்து நிலையம் அருகில், பழைய ரயில் நிலைய சாலை, மார்க்கெட் சாலை, சின்னகாஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து மாற்றம் செய்து முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com