பொங்கல் பண்டிகை விற்பனைக்கு குவிந்துள்ள மண் பாண்டங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மண்பாண்டத் தொழிலாளர்களின் கைத் திறனில் பானைகளும், மண் அடுப்புகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை விற்பனைக்கு குவிந்துள்ள மண் பாண்டங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மண்பாண்டத் தொழிலாளர்களின் கைத் திறனில் பானைகளும், மண் அடுப்புகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, திருமணி, திருக்கழுகுன்றம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி, சித்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் மண் பாண்டங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. மண் பானைகள், பூந்தொட்டிகள், சிறிய வட்டில்கள் உள்ளிட்டவை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதுகுறித்து சிதண்டி மண்டபத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தயாரிப்பாளர் அமுதா சம்பத் கூறியது:
 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மண் பானைகள், அடுப்புகள் அதிகஅளவில் உற்பத்தி செய்து, விற்பனைக்கு வைக்கப்படுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாள் அன்று விளக்கேற்றி வைக்க மண்ணால் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. மற்ற நாள்களில் சட்டிகள், சிறு குவளைகள், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான சிறு பானைகள் ஆகியவை விற்பனையாகும்.
 மண் பாண்ட உற்பத்தியின்போது, நாங்கள் எடுத்து வரும் களிமண்ணில் நீர்விட்டு, பதமாக பிசைந்து சிறு கற்களை நீக்குகிறோம். பின்னர், தயாரிக்கும் மண் பாண்டங்கள் வெயில் காலத்தில் நிழலில் உலர வைக்கப்படுகின்றன. பின்னர், இதமான தீயில் இட்டு, வேக வைத்து, விற்பனைக்கு அனுப்புகிறோம். மண் பாண்டங்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு ஓய்வு என்பது மழைக்காலம் மட்டுமே. மண் பாண்டங்கள் தயாரிக்கத் தேவையான களிமண், நெருப்பில் இட்டு வேக வைப்பதற்குத் தேவையான விறகுக் கட்டைகள் போன்ற பொருள்களை சேகரிப்பதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. கிராமங்களில் கூட வேலிக்காத்தான் உள்ளிட்ட விறகுகள் கிடைப்பது கடினமாக உள்ளது. அரசு சார்பில் ஒரு சிறிய மின் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு, அகல் விளக்கு, சிறிய தட்டுகள், சிறிய மண்பாண்டப் பொருளைத்தான் தயாரிக்க முடியும். பழைய பயன்பாடான சக்கரத்தில் களி மண்ணை வைத்து, கம்பால் சுற்றிவிட்டு, பானைகள் உள்ளிட்ட சிறிய, பெரிய மண் பாண்டங்களைத் தயாரிக்கலாம். மண் அடுப்பைப் பொருத்தவரை கையால்தான் செய்ய முடியும். வீட்டில் ஆண்கள் மற்ற மண் பாண்டங்களை செய்தாலும், அடுப்புகளை தயாரிப்பதில் மட்டும் பெண்கள் முழுமையாக இறங்கி விடுவோம். காலங்கள் மாறினாலும், நாகரிகம் வளர்ந்தாலும் மண் மணம் மாறாமல் பாரம்பரிய பொங்கல் கொண்டாடுபவர்கள், பானைகளையும் அடுப்பையும் கண்டிப்பாக தேடிவந்து வாங்குகின்றனர். நாங்கள் மண் பாண்டப் பொருள்களை சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனைக்கு கொடுக்கிறோம். சிறிய பானைகளை அளவுக்கு ஏற்ப ரூ. 20 முதல் ரூ. 100 வரையிலும், அடுப்புகளை ரூ. 50 வரையிலும் கொடுக்கிறோம். விற்பனையாளர்கள் அவற்றை இருமடங்கு அல்லது அதற்கும் மேல் விலை வைத்து விற்கின்றனர். ஆனால் இந்த முறை எங்களிடம் இருந்து குறைந்த அளவுக்கே வியாபாரிகள் பானைகளையும், அடுப்புகளையும் வாங்கிச் சென்றுள்ளனர். பொங்கல் தினத்தன்று செங்கல்பட்டு சந்தைப் பகுதியில் நாங்களே நேரடியாகவும் விற்பனை செய்வோம்.
 இத்தொழிலில் போதிய வருவாய் இல்லை என்ற நிலையால், அடுத்த தலைமுறையினர் வேறு பணிகளுக்குச் செல்லத் தொடங்கி விட்டனர் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com