மாமல்லபுரத்தில் பொங்கல் சுற்றுலா விழா

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், பொங்கல் சுற்றுலா விழா மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் பொங்கல் சுற்றுலா விழா

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், பொங்கல் சுற்றுலா விழா மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு அரசுத் துறை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் விழாவுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமை வகித்தார். மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் சக்திவேல் வரவேற்றார். காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஆறுமுகம், மாமல்லபுரம் நகரச் செயலாளர் ஏ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலகம் அருகில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டிகளில் மேளதாளங்கள் முழங்க, வெள்ளைக்குதிரை முன்செல்ல கொக்கிலமேடு கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 சுற்றுலாத் துறை சார்பில், கிராம எல்லையில் நையாண்டி மேளம், கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்கள் தாரை தப்பட்டை முழங்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் குங்குமம் இட்டு வரவேற்பு அளித்தனர். சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் பெண்களுடன் இணைந்து அம்மனுக்குப் படையலிட்டு, சூரியனை வழிபட்டு மண்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர், பொங்கல் விழா பற்றியும் பொங்கல் தயாரிப்பது பற்றியும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிராமத்தினர் விளக்கினர்.
 பொங்கல் சுற்றுலா விழாவையொட்டி நடத்தப்பட்ட உறியடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீனாட்சி ராகவன் குழுவினரின் பாரம்பரிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
 கோலப் போட்டி...
 மாமல்லபுரம் கலங்கரை விளக்கு நலச் சேவை மையமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து பொங்கலை முன்னிட்டு, தலசயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடத்திய கோலப் போட்டி விழாவுக்கு, மாமல்லபுரம் நகரச் செயலாளர் மல்லை வீ.வினோத் தலைமை வகித்தார்.
 இ.சி.ஆர்.அன்பு, சிவா, ஐயப்பன், பிரகாஷ், மல்லை சாலமன் வரவேற்றார்.
 மாமல்லபுரம் கலங்கரை விளக்கு நல மையத்தின் மேலாளர் வீ. கிட்டு போட்டிகளை நடத்தினார். மக்கள் வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் மல்லை ஜனார்த்தனம் பெண்களுக்கான கோலப் போட்டியை தொடங்கி வைத்தார். அதுபோல் ஆண்களுக்கு கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. திமுக நகரச் செயலர் வெ.விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 விழாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்களை இட்டனர்.
 மதுராந்தகத்தில்...
 மதுராந்தகத்தை அடுத்த தொழுபேட்டில் புதிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில், சமத்துவப் பொங்கல் விழா, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 விழாவுக்கு மாநில பொதுச் செயலர் ஏ.எம்.மணிபாரதி தலைமை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலர் எஸ்.அக்பர், இணை பொதுச் செயலர் ஜி.சிவவாக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலர் கு.சகாதேவன், துணைப் பொதுச் செயலர் எம்.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், புதிய பானையில் அரிசி இட்டு பொங்கல் வைத்துக் கொண்டாடினர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 பாமக சார்பில்...
 மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூரில் காஞ்சி தெற்கு மாவட்ட பாமக, பசுமைத் தாயகம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலர் கோபாலகண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மத்திய முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு, சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர் பேரியக்க துணைச் செயலர் சாந்தமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் கருணாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 தேமுதிக சார்பில்...
 உத்தரமேரூர் பேரூர் கிளை தேமுதிக சார்பில், நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, கட்சியின் பேரூர் செயலர் வீரமணி தலைமை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன் விழாவைத் தொடக்கி வைத்தார். தேமுதிக நிர்வாகிகள் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று, பெருமாள் கோயில் அருகே பொங்கல் விழாவைக் கொண்டாடினர். அப்போது, புதுப் பானையில் பச்சரிசி, வெல்லம், பருப்பு வைத்து பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, ஏழை, எளியோருக்கு அரிசி, பருப்பு, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
 மாவட்ட இளைஞரணிச் செயலர் அருண்குமார், ஒன்றியச் செயலர்கள் அழிசூர் கன்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com