உயிரி எரிவாயுவில் பொங்கலிட்டு கொண்டாட்டம்

காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் உயிரி எரிவாயுவை (பயோகேஸ்) பயன்படுத்தி நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை பொங்கல் வைத்து கொண்டாடினர்.
உயிரி எரிவாயுவில் பொங்கலிட்டு கொண்டாட்டம்


காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் உயிரி எரிவாயுவை (பயோகேஸ்) பயன்படுத்தி நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை பொங்கல் வைத்து கொண்டாடினர்.
நத்தபேட்டை திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். சிஎல்ஆர்ஐ நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உயிரி எரிவாயு குறித்துப் பேசியது: காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமார் 65 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. 
கடந்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் சேகரிக்கப்படும் குப்பைகளை, மக்கும், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து 45-60 நாள்களுக்குள் உரமாக்கப்பட்டு வருகின்றன. தயாரிக்கப்படும் உரமானது விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 1,500 டன் இயற்கை உரம் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், உணவக, அடுமனைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், காய்கறி அங்காடி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் சுமார் 5 டன் அளவில் நாள்தோறும் சேகரிக்கப்படுகிறது. அவற்றை, உயிரி எரிவாயு கலன் மூலம் நொதிக்கச் செய்து உயிரி எரிவாயுக் தயார் செய்யப்படுகிறது. உயிரி எரிவாயு மூலம் ஜெனரேட்டரை இயக்கச் செய்து, உரக்கிடங்கில் உள்ள விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றன. 
மேலும், மோட்டார் இயக்கம், சமையல் எரிவாயு உருளைகள் தயாரித்தல், வாகனங்களுக்கு எரிபொருள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் காஞ்சிபுரம் பெருநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதனுடன் கூட்டு முயற்சி மூலம் சிலிண்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் முன்னோடியாக ஜனவரி 14 -ஆம் தேதி உயிரி எரிவாயு கொண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் மகேந்திரன், நகராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். 
வில்வராயநல்லூரில்...
காஞ்சிபுரத்தை அடுத்த வில்வராயநல்லூரில் பெருநோக்கு சமூகக் கல்வி மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா வி.கே.எம். உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்வி மன்ற நிறுவனத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர்கள் சக்திவேல், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அதைத் தொடர்ந்து, 60-க்கும் மேற்பட்ட முதியோருடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதியோர் நலன், பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள், சட்ட விதிகள் குறித்து குழந்தைகள் நலக்குழும அலுவலர்கள் எடுத்துரைத்தனர். அதன்பின், முதியோர்களுக்கு புத்தாடை, பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. நிறைவாக,பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெகன்நாதன் நன்றியுரையாற்றினார்.
இதில், முன்னாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமநாதன், பள்ளி தலைமையாசிரியர் அரிகிருட்டினன், தணிக்கை மேற்பார்வையாளர் தாரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
ஸ்ரீபெரும்புதூரில்...
சுங்குவார்சத்திரத்தை அடுத்த சந்தவேலூர் பகுதியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், சந்தவேலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா.சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், சந்தவேலூர் பகுதி பொதுமக்கள் மற்றும் நரிக்குறவர்கள் கலந்து கொண்டு, மண் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், சந்தவேலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுருகன், ஊராட்சி செயலர் நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தின் செயல் அலுவலர் வ.பிரேமா தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், பேரூராட்சி அலுவலர்கள் பரப்புரையாளர்கள், டெங்கு பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com