காஞ்சிபுரத்தில் மாட்டுப் பொங்கல் விழா

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் மாட்டுப் பொங்கல் விழா

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள வாலாஜாபாத், ஏகனாம்பேட்டை, அய்யம்பேட்டை, உத்தரமேரூர், கீழ்கதிர்பூர், விஷார், கீழம்பி, பெரும்பாக்கம், மானாம்பதி, விப்பேடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உழவுக்கு உதவியாக இருக்கும் ஏர் கலப்பையை மஞ்சள், குங்குமம் இட்டு, மாடு, பசு, ஆடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை நீராட்டி, பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டனர்.
அதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கால்நடைகள் வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்டன.
அதிகாலை முதலே பொங்கல் பானை, கரும்பு, மாடு, கன்று, சூரியன் உள்ளிட்டவற்றை பல வண்ணங்களில் கோலமிட்டனர். மேலும், காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட பிள்ளையார்பாளையம், சின்ன காஞ்சிபுரம், செவிலிமேடு, யாதவர் தெரு உள்ளிட்ட பகுதி தெருக்களில் மாடுகளுடன் கன்றுகளை அழைத்துச் சென்றனர்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு: பொங்கல் விழாவையொட்டி, ஏகாம்பரநாதர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், கச்சபேஸ்வரர், அஷ்ட புஜபெருமாள், வைகுண்ட பெருமாள், சித்திரகுப்தர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக- அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அதுபோல், குமரக் கோட்டம் முருகன் கோயில் உற்சவர் வெள்ளித்தேரில் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கம், புதுப்பட்டினம் அருகில் வாயலூர் ஐந்துகாணி இருளர் குடியிருப்பு பகுதியில் இருளர் சமூக மக்களுடன் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, வாயலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் கிங் உசேன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஸ்ரீகுமார், முன்னாள் புதுப்பட்டனம் தலைவர் கவிஞர் கலியப்பெருமாள், கவிஞர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ தனபால், காயத்ரி தனபால், திருக்கழுகுன்றம் தனிவட்டாட்சியர் சரவணன், சகோதரர் சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இருளர் இன பெண்கள் மண் பானையில் பொங்கலிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com