உலகளந்த பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.


காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் நாடு முழுவதும் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், 108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம், திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் இக்கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் வரும் தை மாத்தில் பிரம்மோற்சவ விழா 10 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டின் பிரம்மோற்சவ விழா கடந்த ஜனவரி 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு சிறப்பு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி கருட சேவை விசேஷமாக நடைபெற்றது. 
தொடர்ந்து, அன்றைய நாள் ஹனுமந்த வாகன உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, 7ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உலகளந்த பெருமாள் எழுந்தருளினார். பின்பு, அதிர்வேட்டு, மேளதாளங்கள் முழங்க பெருமாள் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு ராஜவீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. அப்போது, குழுமியிருந்த திரளான பக்தர்கள் பெருமாளை பக்தியுடன் வழிபட்டனர். 
வரும் 21ஆம் தேதி பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com