பறவைகளின் பார்வையில் சிக்கிய வயல்வெளிகள்

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வயல்வெளிகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளை ஈர்த்துள்ளன.


காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வயல்வெளிகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளை ஈர்த்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறுகள் இருந்தாலும், ஏரிகள், கிணறுகள் மூலமே அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதன்படி, சுமார் 900த்துக்கும் மேற்பட்ட ஏரிகள் மாவட்டம் முழுவதும் உள்ளன. தாமல், உத்தரமேரூர், மதுராந்தகம், ஆதனூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியாகும் உபரிநீரின் மூலம் விவசாய நிலங்கள் பண்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற விளை நிலங்களில் நீர் பாய்ச்சி மண்ணைப் பண்படுத்தும்போது, அந்நிலங்களில் புழு, பூச்சிகள், சிறு நீர்வாழ்வினங்கள் வசிக்கின்றன. 
அவற்றை உண்பதற்கு பல கி.மீ. தூரம் பயணித்து பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்கின்றன. ஏற்கனவே, மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் வேடந்தாங்கல் ஏரிப்பகுதியில் பல்வேறு வகையிலான ஆயிரக்கணக்கான பறவைகள், கண்டம் விட்டு கண்டம் தாண்டி மழைக்காலம், வசந்த காலங்களில் வந்து தங்கிச் செல்வதுண்டு. இதைக் காண சில குறிப்பிட்ட மாதங்களே அச்சரணாலயத்துக்கு செல்ல முடியும். 
ஆனால், காஞ்சிபுரம், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் இரை தேடி நாள்தோறும் நூற்றுக்கணக்கான பறவைகள் அண்மைக்காலமாக வந்து செல்கின்றன. குறிப்பாக,தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதற்கு முன்னதாக அந்நிலப்பகுதி பண்படுத்தப்பட்டு, உழும்போது இரையை உண்பதற்காக பறவைகள் குவிந்து வருகின்றன. 
அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூநாரை, வர்ண நாரை, கொக்கு, ஊர்க்குருவி, சாம்பல் நாரை, செங்கால் நாரை, சிட்டுக்குருவி, கிளி, வாலாட்டிக்குருவி, மீன்கொத்தி, தவிட்டுக்குருவி என பல்வேறு வகையான பறவைகளை சாதாரணமாக விளைநிலங்களில் காண முடிகிறது. மேலும் நீர்நிலைகளில் இருக்கும் பறவைகளும் இடம்பெயர்ந்து தற்போது கிராமப்புற வயல்வெளிகளில் சுற்றித் திரிகின்றன. அதன்படி, தற்போது காஞ்சிபுரத்தை அடுத்த வாரணவாசி, வாலாஜாபாத், தேவிரியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களை உழுது பச்சைப் பயறு பயிரிடுவதற்கு தயார் செய்யும்போது இவ்வகை பறவையினங்கள் காணப்படுகின்றன. 
அவற்றைக் காண நகரவாசிகள் பலரும் கிராமத்துக்கு சென்று ரசித்து வருகின்றனர். வேடந்தாங்கலில் காணப்படுவது போலவே கிராம வயல்வெளிகளில் பறவைகள் வந்து செல்வதை கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கின்றனர். மேலும் வயல்வெளியில் விவசாயப்பணிகளில் உழவர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com