சுடச்சுட

  
  dance


  இந்தியா சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்ற நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. 
  சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் வகையிலும், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை வெளிநாடுகளுக்கு பரப்பும் வகையிலும் ஆண்டுதோறும் நாட்டிய விழா நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 23ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் குத்துவிளக்கேற்றி இந்த விழாவைத் தொடங்கி வைத்தனர்.
  மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே உள்ள திறந்தவெளி கலையரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம், ஒடிசி, கதக், குச்சிப்புடி, குஜராத்தி மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் ஒடிசி மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடத்தினர். 
  அதைத் தொடர்ந்து, நாட்டிய விழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை இணை இயக்குநர் எஸ்.புஷ்பராஜ், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.
  மேலும் ஒரு மாதம் நடைபெற்ற நாட்டிய விழாவை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்ததாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்தனர். ஒரு மாத நாட்டிய விழாவையொட்டி தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடன மேடை அருகே மலிவு விலை உணவகம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உணவு சாப்பிட்டனர். இதன் மூலம், அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் வருவாய் கிடைத்ததாக மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டல் மேலாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai