அடிப்படை வசதிகள் கோரி குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 22nd January 2019 04:03 AM | Last Updated : 22nd January 2019 04:03 AM | அ+அ அ- |

காந்திநகர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் அப்பகுதி குடியிருப்போர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மேற்கு மணிமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் காந்திநகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியினருக்கு பட்டா, மின்இணைப்பு, சாலை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, ஆட்சியரிடம் திங்கள்கிழமை அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காந்திநகர் பகுதியில் வசித்துவரும் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. அதேபோல், 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை. காந்திநகர் பகுதியிலிருந்து வேலை, பள்ளி, கல்லூரிக்குச் செல்லவேண்டுமெனில் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து படப்பை வரை செல்லும் சூழல் உள்ளது. சாலை மண்சாலையாகவே உள்ளதால் மழைக்காலத்தில் கடும் பாதிப்புக்குள்ளாகிறோம்.
மருத்துவ வசதிக்கு சாலமங்கலத்துக்கு செல்ல வேண்டும். சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், எங்கள் பகுதியினர் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, மாவட்ட ஆட்சியர் அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.