சுடச்சுட

  

  எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 02nd July 2019 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரமேரூரில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த அரும்புலியூர் கிராமத்தில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இத்திட்ட எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள்:
  மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலை அமைக்கத் திட்டமிட்டன. இந்தச் சாலையால் உத்தரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, அரும்புலியூர், சீத்தாவரம், மலையாங்குளம், புத்தளி, புலிவாய், மணல்மேடு, கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், அனுமந்தண்டலம், மானாம்பதி, பெருநகர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிப்படைகின்றனர். 
  அதன்படி, ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் கிணறுகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், கண்மாய், ஏரி, கால்வாய் என நீர்நிலைகள் மட்டுமின்றி வனப்பகுதிகள் என பலவகைகளில் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்துக்கு நிலத்தை அளவீடு செய்ய காவல்துறை உதவியோடு விவசாயிகளை அடக்குமுறை செய்து அரசு அதிகாரிகள் நில அளவீடு செய்தனர். அப்போது விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தினர்.
  இதையடுத்து எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி விவசாயிகள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வெளியானது. 
  இதில் நிலம் கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட அறிவிப்பாணை செல்லாது என்றும், உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், விவசாயிகளிடம் அவர்களது நிலத்தை ஒப்படைக்கும்படியும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்தும், எட்டு வழிச்சாலையை அமைக்க அனுமதி கோரியும் வேண்டும் மத்திய அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
  இதையடுத்து, உத்தரமேரூர் அடுத்த அரும்புலியூர் கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், நிர்வாகிகள் அருள், செளந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் எட்டு வழிச்சாலைக்கு விவசாயிகள் நிலத்தைத் தர மாட்டோம் என்று ஒருமனதாக உறுதியேற்றனர்.
  மேலும், தமிழக முதல்வர் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு இல்லை என அறிக்கை வெளியிட்டு வருகிறார். 
  ஆனால் பாதிக்கப்படும் 5 மாவட்ட விவசாயிகள் யாரும் நிலத்தைத் தரத் தயாராக இல்லை. எட்டு வழிச்சாலையை அமைக்க அரசு செய்துள்ள மேல்முறையீட்டை எதிர்த்து நீதிமன்றம் வாயிலாகவும், விவசாயிகள் போராட்டம் நடத்தியும் வெற்றி காண்போம் என அவர்கள் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai