காட்டு முயல்கள் வேட்டையைத் தடுக்க வனத்துறைக்கு கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அதிக அளவில் காட்டு  முயல்கள்  வேட்டையாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால்,  இதனைத் தடுக்க  வனத்துறையினர் தீவி
காட்டு முயல்கள் வேட்டையைத் தடுக்க வனத்துறைக்கு கோரிக்கை


ஸ்ரீபெரும்புதூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அதிக அளவில் காட்டு  முயல்கள்  வேட்டையாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால்,  இதனைத் தடுக்க  வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உள்பட்ட மண்ணூர், பூந்தண்டலம், நடுவீரப்பட்டு, சேத்துப்பட்டு, மலைப்பட்டு, மாகான்யம், வட்டம்பாக்கம், நல்லூர், வடக்குப்பட்டு, வைப்பூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. 
இந்தக் காடுகளில் புள்ளி மான்கள், மயில்கள், காட்டு  முயல்கள்,  முள்ளம்பன்றிகள், நரிகள்,  பாம்புகள், உடும்புகள், கீரிப்பிள்ளைகள், காட்டுப்பூனைகள் என ஏராளமான  உயிரினங்கள் வாழ்கின்றன. 
வேட்டையாட தடைசெய்யப்பட்ட இந்த வன உயிரினங்களில் குறிப்பாக காட்டு முயல்கள்,  உடும்புகள் போன்றவை இறைச்சிக்காக  அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. 
நரிகள் அதன் பற்களுக்காகவும், நகங்களுக்காகவும்  வேட்டையாடப்படுகின்றன. காட்டு முயல்கள் மற்றும் உடும்புகள் வேட்டையாடப்பட்டு, அதன் இறைச்சி மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான படப்பை, வட்டம்பாக்கம், வைப்பூர், சேத்துப்பட்டு,  கரசங்கால் ஆகிய பகுதிகளில் காட்டு முயல்கள் மற்றும் உடும்புகளின் இறைச்சி விற்பனை வெளிப்படையாகவே நடந்து வருகிறது.  
தண்ணீர் தேடி காடுகளை விட்டு குடிநீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் மான் மற்றும் வன உயிரினங்கள் விபத்துகளில்  சிக்கியும், தெருநாய்களால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்து வரும் நிலையில்,  தற்போது காட்டு முயல்களும், உடும்புகளும் இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது:  ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. அதேவேளையில், இப்பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. 
இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளால் காடுகளில் வசிக்கும் வன உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.  இந்த காப்புக் காடுகளில் மாகான்யம் பகுதியில் மட்டும் மான்களுக்காக ஒரே ஒரு குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியிலும் எப்போதாவது ஒரு முறை மட்டுமே குடிநீர்  நிரப்பப்படுகிறது. இதனால், குடிநீர் இல்லாமல் ஏராளமான உயிரினங்கள் பலியாகி வருகின்றன.   
இந்த நிலையில், தற்போது விலங்குகள் வேட்டையாடப்படுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டு முயல்கள், உடும்புகளின் இறைச்சிகள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. 
முன்பு, காட்டு முயல்களின் விற்பனை மறைமுகமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஸ்ரீபெரும்புதூர், படப்பை, கரசங்கால், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஸ்ரீபெரும்புதூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாழும் வன உயிரினங்கள் விரைவில் அழிந்துவிடும். எனவே, வேட்டையாடப்படும் வன உயிரினங்களைக் காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com