சுடச்சுட

  


  அத்திவரதர் பெருவிழாவின் 13-ஆம் நாளான சனிக்கிழமை 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
  13-ஆவது நாளான  சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும்,  மாதத்தின் 2-ஆவது சனிக்கிழமை என்பதாலும் அத்திவரதரை தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வரதர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதலே வரத்தொடங்கினர். 
  தெற்கு, வடக்கு, கிழக்கு மாடவீதிகளில் வரிசையில் வந்த பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழியாக அதிகாலை 4.30 மணி முதல் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
  மயில் பச்சை நிறத்தில் அத்திவரதர்: அத்திவரதருக்கு சனிக்கிழமை மயில் பச்சை நிறத்தில் பட்டாடை அணிவித்து, மலர்கள், துளசி ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டது. நைவேத்தியம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
  தரிசன வரிசை மாற்றிமைப்பு: பக்தர்களின் வருகை சனிக்கிழமை அதிகம் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிழக்கு கோபுர நுழைவு வாயிலின் இடது புறம் தூய்மைப்படுத்தப்பட்டு, அங்கு விரைவாக மேற்கூரை அமைக்கப்பட்டது. 
  பின்பு, குறுக்கு நெடுக்காக சுமார் 10 பொது தரிசன வரிசை ஏற்படுத்தி, பக்தர்கள் செல்லுமாறு மாற்றிமைக்கப்பட்டது. இதனால், கிழக்கு கோபுரத்திலிருந்து ஆழ்வார் சந்நிதிக்குச் செல்லவே சுமார் 4 மணி நேரம் ஆனது. 
  அங்கிருந்த மருத்துவ முகாம் கிழக்கு கோபுரத்தின் வடக்கு பகுதியில் மாற்றிமைக்கப்பட்டது. 
  புதியதாக அமைக்கப்பட்ட வரிசையில் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்கு தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், மின்விசிறிகள் இயங்காததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 
  தரிசன நேரம் நீட்டிப்பு
  அத்திவரதரை தரிசனம் செய்ய சனிக்கிழமை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்ததால், இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்ட தரிசன நேரத்தை 3 மணி நேரம் அதிகரித்து, நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) வழக்கமான தரிசன நேரம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai