10-ஆம் வகுப்பு மாணவர்கள் 24 வரை வேலைவாய்ப்பு இணையத்தில் பதியலாம்
By DIN | Published On : 15th July 2019 12:53 AM | Last Updated : 15th July 2019 12:53 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூலை 24 ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதுகுறித்த விவரம்:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நேரடியாக www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், அடையாள அட்டை பெறவும் அரசு வழிவகை செய்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வராமல், இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த வசதியால், போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுவதால் மாணவர்கள் சிரமமின்றி பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஜூலை 24 ஆம் தேதிவரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கப்படவுள்ளது. அதன்படி, மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு,அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.