முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
செங்கல்பட்டு தனி மாவட்டம்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
By DIN | Published On : 30th July 2019 04:31 AM | Last Updated : 30th July 2019 04:31 AM | அ+அ அ- |

செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்தல் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரத்தில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 -ஆம் தேதிகளில் நடத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்தல் தொடர்பாக நடைபெறவுள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்தில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என கடந்த 18-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் மு.சத்தியகோபால் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 -ஆம் தேதிகளில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும்.
இதில், 5-ஆம் தேதி நடைபெறும் கூட்டம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும், 6-ஆம் தேதி நடைபெறும் கூட்டம் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும் நடைபெறும். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், காஞ்சிபுரம் , மதுராந்தகம், தாம்பரம் வருவாய்க் கோட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமும் கருத்துகள் கேட்கப்படும்.
எனவே, இதுதொடர்பாக எழுத்து மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ கருத்து தெரிவிக்க விரும்பும் நபர்கள் மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.