முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மதுராந்தகம் ஏரியை தூர்வாரக் கோரி பாதுகாப்புக் குழுவினர் ஊர்வலம்
By DIN | Published On : 30th July 2019 04:32 AM | Last Updated : 30th July 2019 04:32 AM | அ+அ அ- |

மதுராந்தகம் ஏரியை தூர் வார வலியுறுத்தி, ஏரி பாதுகாப்புக் குழுவினர் திங்கள்கிழமை ஊர்வலமாக வந்து மதுராந்தகம் சார்-ஆட்சியர் மாலதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக திகழும் மதுராந்தகம் ஏரி, பொதுப்பணித்துறை பாசனப் பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரியின் மூலம் 1154.88 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஏரியின் முழு கொள்ளளவு 694 மில்லியன் கன அடியாகவும், 976 ஹெக்டர் நீர் பிடிப்பு பரப்பளவும் கொண்டது. இந்த ஏரி நீர் விவசாய மக்களுக்கு பாசன ஆதாரமாகவும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிதூர் வாரப்படாததால் மழைக்கால வெள்ளநீரால் அடித்து வரப்பட்ட வண்டல் மண் படிந்துள்ளதால் நீர்பிடிப்பு கொள்ளளவு வெகுவாக குறைந்துள்ளது. ஏரியை தூர்வாரி, விவசாயப் பயன்பாடு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவற்றை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை போராட்டங்களை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் ஏரியை உடனடியாக தூர் வாரவேண்டும். ஏரி நீர் செல்லும் கிளியாற்றுப் பகுதியில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அமைப்பின் சார்பில் மதுராந்தகம் ஏரி பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.
அதன்படி, மதுராந்தகம் நகரில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கடந்த 1 மாத காலமாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தினை நடத்தி வந்தனர்.
இவ்வாறு பொது மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை ஒருங்கிணைத்து மதுராந்தகம் சார்-ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஏரி பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் வழக்குரைஞர் டி.கிருஷ்ணராஜ், மாசிலாமணி ஆகியோர் தலைமையில் ஏரி பாதுகாப்புக் குழுவினர் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் சிபிஎம் கட்சி மதுராந்தகம் கிளைச் செயலர் வாசுதேவன், தமாகா நிர்வாகி ஆதிகேசவன், லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி தேவமணி, காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னிகா, கோட்டி, வர்த்தக சங்க நிர்வாகி பானுசேகர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, நேரு, ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் ரமேஷ், இளங்கோ உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இக்குழுவினர் மதுராந்தகம் பொதுப்பணித்துறை (பாசனப் பிரிவு) இளநிலை பொறியாளர் ஜி.குமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர், மதுராந்தகம் சார்-ஆட்சியர் மாலதியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சார்-ஆட்சியர் மாலதி, இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.