முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
3 பேரை அரிவாளால் வெட்டிய மர்மகும்பல்
By DIN | Published On : 30th July 2019 04:29 AM | Last Updated : 30th July 2019 04:29 AM | அ+அ அ- |

சென்னை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை திருப்போரூர் அருகே திங்கள்கிழமை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடிய 6 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த சுரேஷ் (எ) அம்மாபாய் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு மர்ம கும்பல் கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சீனு (32), ஏசு மகன் பிரசாந்த் (32), தங்கமுத்து மகன் வீரராகவன் ( 32), தாஸ் மகன் சுமன் (31), முத்து என்பவரின் மகன் மணி (35) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜரான சீனு, பிரசாந்த், வீரராகவன், சுமன், மணி ஆகியோர் விசாரணை முடிந்து ஆட்டோவில் செங்கல்பட்டு -திருப்போரூர் வழியாக சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது இவர்களைப் பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், கொட்டமேடு மைலம் பொன்னியம்மன் கோயில் அருகில் ஆட்டோவை வழிமறித்து, அதில் இருந்த சீனு, பிரசாந்த், வீரராகவன் ஆகிய 3 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
காயமடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.