அத்திவரதர் பெருவிழாவில் உள்ளூர் மக்கள் தரிசனத்துக்கு நேர ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி உள்ளூர் மக்கள் தரிசனம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.


அத்திவரதர் பெருவிழாவையொட்டி உள்ளூர் மக்கள் தரிசனம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. அத்திவரதரைத் தரிசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகை தரவுள்ளனர். அத்திவரதரை தரிசிப்பதற்கு கோயில் வளாகத்துக்குள் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் தரிசன வரிசை, முக்கியஸ்தர்கள் வரிசை, மாற்றுத் திறனாளிகள்-முதியோருக்கான வரிசை என பிரிக்கப்பட்டு தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 
அவ்வகையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு காஞ்சிபுரம் வாசிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், அனைத்து உள்ளூர்வாசிகளும் இதர பகுதிகளில் இருந்து வருவோருடன் சென்று தரிசனம் செய்தால் குறிப்பிட்ட நாள்களுக்குள் தரிசனம் செய்ய முடியாது. 
அத்துடன், நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்படும். எனவே, உள்ளூர்வாசிகள் தனிவரிசை அமைப்பது அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் பா.பொன்னையா கூறியது:
அத்திவரதர் பெருவிழாவையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இலவசமாகவும், ரூ.50 செலுத்தியும் தரிசனம் செய்யலாம். இதைத் தவிர உள்ளூர்வாசிகள் அத்திவரதரைத் தரிசனம் செய்ய பிரேத்யேகமாக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, உள்ளூர்வாசிகள் தரிசனம் செய்யும் வகையில், அவர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் மூலம் அவர்களுக்கு தரிசனம் செய்துவைப்பது தொடர்பாக தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த பின் அனுமதி, தரிசன நேரம் உள்ளிட்டவை குறித்து பின்னர் அரிவிக்கப்படும் என்றார் அவர். 
ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
அத்திவரதர் பெருவிழாவை முன்னிட்டு, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தரவுள்ளனர். அவ்வாறு வருபவர்கள் தங்குவதற்கு காஞ்சிபுரம் நகரில் போதிய விடுதிகளோ, தங்குமிடங்களோ இல்லை. பெரும்பாலான இடங்களில் பக்தர்கள் இளைப்பாற தொன்மையான மண்டபங்கள்தான் இருக்கின்றன.
கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், கச்சபேஸ்வரர் கோயில் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே, இந்த மண்டபங்களை ஆக்கிரமித்திருக்கும் கடைகள் அனைத்தையும் விரைந்து காலிசெய்து வெளியூர் பக்தர்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 
பள்ளி நேரத்தில் மாற்றம்
இதுகுறித்து ஆட்சியர் பா.பொன்னையா கூறுகையில், அத்திவரதர் பெருவிழா நேரங்களில் பக்தர்களின் வருகை நிச்சயமாக அதிக அளவில் இருக்கும். அப்போது, பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிகள், வீடுகளுக்குச் செல்லும் வகையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வகுப்பு நேரத்தில் மாற்றம் செய்து முழுநேரமும் பள்ளிகள் செயல்படுத்துவதோடு, மாணவர்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறையுடன் ஆலோசித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com