அரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்திலேயே அரசு மருத்துவமனையில்
அரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முழங்கால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்திலேயே அரசு மருத்துவமனையில் இத்தகையை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரமேரூரை அடுத்த ஆட்டுப்புத்தூர், நடுத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (60). கூலித்தொழிலாளியான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலது கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. எனினும் அவரால் அதன் பின்பு நடக்கவே முடியாமல் படுத்த படுக்கையாய் இருந்தார். 
சுந்தரராஜை அவரது மனைவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து எலும்பு  முறிவு மற்றும்  மூட்டு அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.
கால்மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டவரின் கால் மூட்டு நழுவி முற்றிலுமாக விலகி இருந்ததையும், மேலும் செயற்கை மூட்டு பாகங்கள் தளர்வாக இருந்ததையும் அரசு மருத்துவர்கள் கண்டறிந்தனர். சுந்தரராஜ் கடந்த ஓராண்டு காலமாக வலது புறத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்தது மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு மறு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவன் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. முதல்வரின் மேற்பார்வையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்  ஆ.மனோகரன் தலைமையிலான  மருத்துவர்கள் கலையரசன், து.எழில்மாறன், ராஜ்குமார், விஜயேந்திரன், ரமலாதேவி, ச.சண்முகம், செவிலியர்கள்  உள்ளிட்ட குழுவினர் சுந்தரராஜுக்கு கடந்த 5-ஆம் தேதி மூட்டுமாற்று மறு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர். இதுகுறித்து மருத்துமனை முதல்வர் உஷா சதாசிவன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த சுந்தரராஜுக்கு அம்மா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மூட்டு மாற்று மறு அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவமனை முதல்வர் நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் மூட்டு உள்பாகத்தில் வைக்கப்படும் கருவிகள் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டன.
கடந்த 5-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மறுநாளே சுந்தரராஜ் எழுந்து நின்று, நடந்து காட்டினார். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டிருக்கலாம். எனினும், அதற்கு குறைந்தது ரூ.5 லட்சம் செலவாகும். மேலும் சிகிச்சைக்கு மேற்கொள்ளும் மருந்துகள், படுக்கைக் கட்டணம் என கூடுதல் செலவாகும். 
ஆனால் தமிழ்நாட்டிலேயே அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டுமாற்று மறு அறுவை சிகிச்சையை எங்கள் மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com