இறந்தவரின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு

பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இறந்தவரின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய
இறந்தவரின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு


பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இறந்தவரின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட வட்டம்பாக்கம் ஊராட்சியில் பனப்பாக்கம் அமைந்துள்ளது. இங்குள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டை அப்பகுதி மக்கள்  கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1915-ஆம் ஆண்டில் இருந்து சுடுகாடு பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
பனப்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாடு கடந்த 1981-ஆம் ஆண்டு வருவாய்த்துறை பதிவேட்டில் வாய்க்கால் என்று தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதை அறியாத அப்பகுதி மக்கள், இறந்தவர்களை அந்த சுடுகாட்டில் தொடர்ந்து அடக்கம் செய்து வந்தனர். 
இதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டிலும் இச்சுடுகாடு வாய்க்கால் என்றும் மீண்டும் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வருவாய்த்துறை பதிவேட்டில் சுடுகாடு என  அதை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் அதைத் திருத்திப் பதிவு செய்தார். 
பனப்பாக்கம் பகுதியில் வீட்டுமனைகள் வாங்கி கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ள சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வாய்க்கால் பகுதி, சுடுகாடு என திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, அதை எதிர்த்து கடந்த 2014ஆம் ஆண்டில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, சுடுகாடு பகுதி, வாய்க்கால்தான் என மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், சுடுகாட்டுப் பகுதி தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அங்கு அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த  சரோஜா என்பவர் கடந்த திங்கள்கிழமை உடலநலக்குறைவால் இறந்தார். அவரது உடலை செவ்வாய்க்கிழமை காலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் காஞ்சனமாலா, மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன், வருவாய் ஆய்வாளர் இந்திராணி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
சுடுகாடு தொடர்பான வழக்கு நிலையில் உள்ளதால் சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்யக் கூடாது. அதை மீறி அடக்கம் செய்தால் நீதிமன்றத்தை அவமதித்து போல் ஆகும் எனக் கூறி அதிகாரிகள் தடுத்தனர். அப்பகுதியில் ஒரகடம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள தனியார் இடத்தில் அடக்கம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com