முழு சுகாதார விழிப்புணர்வு: மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

ஊராட்சிகளில் முழு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையில் மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாம்
முழு சுகாதார விழிப்புணர்வு: மாணவர்களுக்கு பயிற்சி முகாம்


ஊராட்சிகளில் முழு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையில் மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) கீழ் ஊராட்சியில் முழு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் கோடைகால பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு, ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில் முழு சுகாதாரத்துக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, ஆட்சியர் பேசியதாவது: 
தூய்மை இந்தியா இயக்கம், தேசிய இயக்கமாக பிரதமர் மோடியால் கடந்த 2014, அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து கிராமப்புற குடியிருப்புகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. அதன்மூலம், சுகாதார நிலையில் மக்களிடையே மனமாற்றம் செய்யப்பட்டு திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சுகாதார நிலையில் நிலைத்த, நீடித்த சுகாதார நிலையை எட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இதன் ஒருபகுதியாக, தமிழக அரசு, கல்லூரி, பல்கலைகழகங்களுக்கான தூய்மை இந்தியா இயக்க கோடைகால பயிற்சி முகாமை செயல்படுத்தி கல்லூரி மாணவர்களை குறைந்தபட்சம் 60 மணிநேரம் சுகாதார செயல்பாடுகளுக்காக ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் தன்னார்வலராக இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளனர். மாணவர்கள் குழுவாக கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுடன் இணைந்து அவர்களுக்கு தன்சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறை உபயோகம், கை கழும் முறை, திடக்கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், அவற்றை உரமாக மாற்றுவது ஆகியவை பற்றி விளக்கிக் கூற வேண்டும்.
அதேபோல், தெருக்களைத் தூய்மையாக்குதல், கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து தரம் பிரித்து வெளியேற்றி கழிவுகள் இல்லாத சுற்றுப்புறத்தை உருவாக்குதல், சுகாதாரம் சம்பந்தமான தெருமுனை நாடகங்கள், பாடல்கள், நடனங்களை நடத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். வீடுகளுக்குச் சென்று தனிநபர் இல்லக் கழிப்பறை அவசியம் குறித்து விளக்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கான சுகாதாரப் போட்டிகள், பொது இடங்களில் சுகாதாரம் குறித்து வண்ணப்படங்கள் வரைதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தலாம் என்றார் அவர்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், உதவி திட்ட அலுவலர் சத்திய சங்கரி, தூய்மை இந்தியா இயக்க திட்ட  ஆலோசகர் பி.தனசேகர் மற்றும் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பிரதிநிதிகள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com