அரிமா சங்கம் சார்பில் நல உதவி
By DIN | Published On : 25th June 2019 04:33 AM | Last Updated : 25th June 2019 04:33 AM | அ+அ அ- |

மாமல்லபுரம் அரிமா சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
மாமல்லபுரம் அரிமா சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட அரிமா சங்கத் தலைவர் ஓம்பிரகாஷ் ரத்தோர் தலைமை வகித்தார். செயலர் புனிதவேல், பொருளாளர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், அரிமா சங்க மாவட்ட இரண்டாம் நிலை ஆளுநர் கே.அய்யனாரப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாமல்லபுரம் அரிமா சங்க புதிய தலைவராக வி.பாலசந்தர், செயலராக ஏ.விஜயசேகர், பொருளாளராக சி.ராமச்சந்திரன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, ஏழை பெண்களுக்கு வேலை வாய்ப்பு, விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர்கள் டி.துளசிங்கம், எம்.எஸ்.முருகப்பா, மாவட்ட நிர்வாகிகள் கே.பாண்டியன், வி.இ.உமாபதி, டி.கிருஷ்ணராஜ், முன்னாள் நகர நிர்வாகிகள் கே.நடராஜன், எஸ்.பசுலுதீன், கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.