அச்சிறுப்பாக்கம் பகுதியில் லாரிகளால் விபத்துகள் அதிகரிப்பு

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்ககம் நெடுஞ்சாலையில் அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தி சாலையை கடக்கும் மக்களும்,


மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்ககம் நெடுஞ்சாலையில் அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தி சாலையை கடக்கும் மக்களும், வாகனங்களில் செல்வோரும் விபத்தின்றி செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் நகரம் அமைந்துள்ளது. இந்த வழியாக சென்னை மற்றும் திருச்சி என இரு வழித்தடங்களில் அதிக எடைகொண்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் செல்கின்றன. இதேபோல், அருகில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கருங்கல் ஜல்லிகளை லாரிகள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்கின்றன.
இந்த வாகனங்களால், இச்சாலையில் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பயணிப்பவர்களும் தங்கள் உயிருக்கு அஞ்சியபடி பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிக எடையுடன் பொருள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
நெடுஞ்சாலையில் செல்லும் பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் சாலையோரம் இருக்கின்ற தனியார் உணவு விடுதிகளில் சாப்பிடுகின்றனர். அவர்கள் தங்கள் லாரிகளை சாலையை அடைக்கும் வகையில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த லாரிகளுக்குப் பின்னால் வரும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியா நிலை ஏற்படுகிறது. இத்தகைய லாரி ஓட்டுநர்கள் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள அணுகு சாலையைப் பயன்படுத்தினால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு இருக்காது. 
எனவே அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் சரக்கு லாரிகளை நிறுத்தி விட்டு உணவு விடுதிக்கு செல்லும்  ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com