சுடச்சுட

  

  செல்லிடப்பேசிகள் மீது தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லை

  By DIN  |   Published on : 17th March 2019 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லிடப்பேசிகள் மற்றும் ஆவின் நிறுவனப் பொருள்கள் மீது ஒட்டுவில்லைகளை ஒட்டும் பணி ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் சனிக்கிழமை தொடங்கியது.
   மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஆட்சியர் பா.பொன்னையா, அங்கிருந்த பால், நெய், குளிர் பானங்கள் மற்றும் இதர பால் பொருள்கள் மீது, தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டினார்.
   முன்னதாக, ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் "வாக்களிப்பது நமது கடமை' எனும் வாசகம் கொண்ட ஒட்டுவில்லைகளை தங்களது செல்லிடப்பேசியில் ஒட்டியிருந்தனர். இதைத் தொடர்ந்து, திருப்புட்குழி ஊராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அப்பகுதியினரின் செல்லிடப்பேசியில் ஒட்டு வில்லைகளை ஒட்டினார்.
   நிகழ்ச்சியில், ஆட்சியர் கூறியது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த "தேர்தல் விழிப்புணர்வு முகாம்'கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 18004257087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி குறித்த விவரங்களைப் பெறலாம். இதற்காக வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
   நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அருண், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், சார்-ஆட்சியர் சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   மதுராந்தகத்தில்...
   மதுராந்தகம், மார்ச் 16: தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் மதுராந்தகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
   மதுராந்தகத்தில் உள்ள சமையல் எரிவாயு முகமை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு கோட்டாட்சியர் மாலதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், எரிவாயு உருளைகள் மீது தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை அவர் ஒட்டினார். மதுராந்தகம் வட்டாட்சியர் ஜெயசித்ரா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai