தேர்தல் நடத்தை விதிகள்: வங்கி மேலாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
தேர்தல் நடத்தை விதிகள்: வங்கி மேலாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை


தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
 மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிப்பது குறித்த வங்கி மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். மாவட்டத் தேர்தல் செலவின கணக்குப் பார்வையாளர்கள் சுஜித்குமார், பூபேந்திர சிங் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இதுகுறித்து ஆட்சியர் பேசியது: கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்கென காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 33 பறக்கும் படை, 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், நாள்தோறும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரால் வாகனப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் 
ரூ. 50 ஆயிரத்துக்கு மேலாக தொகை எடுத்துச்செல்லும் போது, அதற்குரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொகையை பறிமுதல் செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது.
 இதையடுத்து, தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை, சந்தேகத்துக்குரிய பணவரவுகள் குறித்து வங்கியாளர்கள் நாள்தோறும் மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வங்கியில் ரூ. 1 லட்சத்துக்கு மேலாக பணம் எடுப்போரின் தகவல்களை வங்கியாளர்கள் தெரிவிக்க வேண்டும். அதுபோல், ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் உரிய சான்றுகளுடன் முகவர்களின் முழு தகவல்கள், வாகனங்களின் எண் உள்ளிட்ட விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலருக்குதெரிவிக்க வேண்டும். ஒரே வங்கிக் கணக்கில் இருந்து வழக்கத்துக்கு மாறாக பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றமானது, சந்தேகப்படும் வகையில் இருந்தாலும் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தாலும், வருமான வரித்துறை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்றார் ஆட்சியர். இதில், தேர்தல் நடத்தும் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, வருவாய் அலுவலர் (சிப்காட்)அருண், சார் ஆட்சியர் சரவணண், நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன்,நேர்முக உதவியாளர் (தேர்தல்) அமீதுல்லா, வங்கி மேலாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com