Enable Javscript for better performance
தமிழகத்தில் சிறப்பாக குடிமராமத்துப் பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் சிறப்பாக குடிமராமத்துப் பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    By DIN  |   Published on : 28th March 2019 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eps2

    காக்களூரில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் வேணுகோபால், பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்துப் பேசிய முதல்வர் கே.பழனிசாமி.


    தமிழகத்தில் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயிகள் பாசன சங்கத்தின் மேற்பார்வையில், குடிமராமத்துப் பணிகள் ரூ. 424.44 கோடியில் 327 பெரிய ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
      திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோருக்கு ஆதரவாக இரண்டாம் கட்டமாக தமிழக முதல்வர் புதன்கிழமை பிரசாரம் செய்தார். இதில், திருவள்ளூர் அருகே காக்களூர் சந்தை எதிரே வாக்குகளை சேகரித்து அவர் பேசியது:
      முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையில், மக்களவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அதனால், இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரை தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தியுள்ளோம். ஆனால், எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ள அறிக்கையானது செயல்படுத்த முடியாத வெற்று அறிக்கையாகும்.
     தமிழகத்தில் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயிகள் பாசன சங்கத்தின் மேற்பார்வையில், குடிமராமத்துப் பணிகள் ரூ. 424.44 கோடியில் 327 பெரிய ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. 
    அதேபோல், நதிகள் மற்றும் ஆறுகளின் குறுக்கே விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்தை சேகரிக்கும் வகையில் ரூ. 1,000 கோடியில் தடுப்பணைகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதில், ஏழை, எளிய மாணவ, மாணவியர் கல்வி பெறும் வகையில், இதுவரை 37 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியுள்ளோம். மேலும், 12 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 40 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
    இதுவரையில் 25 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் கட்ட தவணைத் தொகையாக ரூ. 2 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம். ஆனால், திமுகவினர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதிலும் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் கட்டாயம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 
      விவசாயிகள் நாள்தோறும் காய்கறிகள், பழ வகைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். அதனால், உற்பத்தி செய்த விளைபொருள்களை எளிதாக விற்பனை செய்வதற்காக, சென்னை அருகே ரூ. 2 ஆயிரம் கோடியில் பெரிய அளவிலான உணவுப் பூங்கா அமைக்கப்படும். அதேபோல், அவர்கள் கால்நடைகளை இனப்பெருக்கம் செய்து அளிக்க, தலைவாசல் பகுதியில் 900 ஆயிரம் ஏக்கரில் கால்நடை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்க உள்ளோம்.
      மக்களவைத் தேர்தல் வேட்பாளர் வேணுகோபால், பூந்தமல்லி சட்டப்பேரவை வேட்பாளர் வைத்தியநாதன்  ஆகியோருக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் முதல்வர்.        
       பிரசாரத்தின் போது அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், மாவட்ட அதிமுக செயலர் பலராமன், முன்னாள் அமைச்சர் ரமணா,  கட்சி நிர்வாகி ஒன்றியச் செயலர் புட்லூர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.     

    முதல்வரை வரவேற்ற வெளிநாட்டினர்
    தேர்தல் பிரசாரத்துக்காக புதன்கிழமை மாமல்லபுரம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 
    காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்துப் பேச முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை மாமல்லபுரம் வந்தபோது, பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த ஜூலியானா என்ற பெண் தமிழ் நாட்டுப் பெண் போல் சேலை உடுத்தி ஆரத்தி எடுத்து முதல்வரை வரவேற்றார். அவருடன் வந்திருந்த ஆண்கள் வேட்டி உடுத்திக் கொண்டு இரட்டை இலைச் சின்னத்தை கையில் பிடித்தபடி முதல்வரை வரவேற்றனர். அப்போது, வெளிநாட்டினரின் வரவேற்புக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். 
    தொடர்ந்து,  ஜூலியானா செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழகத்தில் நடக்கும் தேர்தல் பிரசாரம் வித்தியாசமானதாக  இருக்கிறது.  முதல்வரை வரவேற்றதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து முதல்வருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இதைப்பார்த்து நானும் தமிழ்ப் பெண்போல் சேலை அணிந்து ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தேன் என்றார்.  இதைக்கண்ட அதிமுகவினர் பலரும் வெளிநாட்டினருடன் இணைந்து சுய படம் எடுத்துக்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai