குப்பைக் கழிவுகளின் கூடாரமாகும் வேகவதி ஆறு

குப்பைக்கழிவுகளின் கூடாரமாக வேகவதி ஆறு மாறி வருகிறது. 
குப்பைக் கழிவுகளின் கூடாரமாகும் வேகவதி ஆறு


குப்பைக்கழிவுகளின் கூடாரமாக வேகவதி ஆறு மாறி வருகிறது. 
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலம் வழியாக  வேலூர் மாவட்ட தமிழக எல்லை வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்தை வந்தடைகிறது பாலாறு. இது சுமார் 222 கி.மீ. தூரம் தமிழகத்தில் பயணிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, ஓங்கூர் ஆறு, கிளியாறு, செய்யாறு, வேகவதி ஆறு என்று கிளை நதிகளாகப் பிரிந்து சென்று திருமுக்கூடல் பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. 
வேகவதி ஆறு ஒரு காலத்தில் காஞ்சிபுரம் நகரின் மையத்திலேயே ஓடியது. நகர மக்களின் குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஆறாக இருந்துள்ளது. அத்துடன், புராணங்களிலும் வேகவதியாறு புனிதத் தன்மையோடு விளங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. 
காலப்போக்கில் இந்த ஆற்றின் இரு மருங்கிலும் குடியிருப்புகள் அதிக அளவில் அமைக்கப்பட்டன. மேலும், வேகவதி ஆற்றில் இன்றும் மணல் கொள்ளை நடைபெறுவதால் ஆற்றின் மையப்பகுதி குட்டைகள் போல் காட்சியளிக்கிறது. நகரின் வழியாகச் செல்லும் ஆற்றின் கரைகள் சுருங்கி கால்வாய் போல் செல்கிறது. கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், தாயார்குளம், காவலான்கேட், கீழ்சாலை, கோட்ராம்பாளையம், ஓரிக்கை, பெரியார் நகர், வாலாஜாபாத் வழியாக சென்று திருமுக்கூடலில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது. 
கழிவுநீர் ஓடும் வேகவதி ஆறு: ஒரு காலத்தில் வேகவதி ஆறு  வரலாற்றுச் சிறப்பும், முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்தது. ஆனால், தற்போது இந்த ஆற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகள் வெளியேற்றும் கழிவுநீரால் முற்றிலும் மாசடைந்து கழிவுநீரோடும் ஆறாக மாறியுள்ளது. 
ஆக்கிரமிப்புகளின் பிடியில்....: ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் குடியிருப்புகளை அமைத்து ஆற்றை மேலும் சுருங்கச் செய்து விட்டனர். இதனால், கடந்த 2015-இல் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ரூ.45 கோடி செலவில் பொதுப்பணித் துறை இந்த ஆற்றை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 
இதற்காக, ஆற்றின் கரையோரங்களில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இப்பணிகள் தற்போது மந்த கதியில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. 
குப்பைக் கழிவுகளின் கூடாரம்: வேகவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தொடர்ந்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளையும் ஆற்றில் கொட்டி வருகின்றனர். அதன்படி, கோட்ராம்பாளையம் வழியாகச் செல்லும் ஆற்றையொட்டி உள்ள முனுசாமி நகர், கணேஷ் நகர் பகுதி மக்களுக்கு பெருநகராட்சி சார்பில் முறையாக குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அப்பகுதி வாசிகள் வேகவதியாற்றை குப்பைக் கிடங்காக மாற்றி வருகின்றனர். 
இதனால், கொசுக்கள் உற்பத்தியாவதோடு, சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் வேகவதி ஆறு சிக்கித் தவிக்கிறது. 
எனவே, ஆற்றை விரைந்து தூர்வாரி பக்கவாட்டுச் சுவர் எழுப்பி பராமரிக்கவும், குப்பைக்கழிவுகளும், கழிவுநீரும் ஆற்றில் கலக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில்களின் புராதன  நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் இதுபோன்ற சுகாதாரச் சீர்கேட்டினால் மாசடைவதாக சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com