வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 01st May 2019 04:05 AM | Last Updated : 01st May 2019 04:05 AM | அ+அ அ- |

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும், திருப்போரூர் பேரவை இடைத் தேர்தலிலும் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் வரும் 23-ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதற்காக, 3 அடுக்குகளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை இரவு திடீரென வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்றார். அப்போது, சீல் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு, அங்கிருந்த பதிவேட்டில் கையொப்பமிட்டு அதையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அமீதுல்லா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜவஹர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.