தென்னை நாற்றுப் பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு
By DIN | Published On : 06th May 2019 12:45 AM | Last Updated : 06th May 2019 12:45 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகள் குறித்து வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி 2 நாள்கள் ஆய்வு செய்தார்.
வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரத்தை அடுத்த பிச்சுவாக்கத்தில் கஜா சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ள ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள தென்னை நாற்றுகளை ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பயிர் திட்டத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோடை சாகுபடி நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி குறித்து ஆட்சியர் பா.பொன்னையா, வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் நீர்ப் பாசனக் கருவிகளை விநியோகம் செய்யவும், துணை நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விரிவான பாசன மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தவும், நுண்ணீர் பாசனத் திட்டம், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் திட்டத்தை மேலும் சிறப்பாகச் செயல்படுத்தவும் வேளாண் இயக்குநர் ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், பஞ்சுப்பேட்டை அரசு விதைப்பண்ணை, முசரவாக்கம் மாநில எண்ணெய் வித்துப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளை வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்து அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.