நீட் : 11 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர்
By DIN | Published On : 06th May 2019 12:42 AM | Last Updated : 06th May 2019 12:42 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மையங்களில் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 765 பேர் தேர்வு எழுதினர். காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர் தனியார் பள்ளி மையத்தில் காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், வந்தவாசி, திருவண்ணாமலை, வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இருந்து வந்திருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர்.
மாணவர்கள் தேர்வெழுத காலை முதலே தேர்வு மையத்துக்கு பெற்றோர்களுடன் வந்திருந்தனர். மாணவியர் அணிந்திருந்த வளையல், கம்மல், மூக்குத்தி, கால் கொலுசு, கிளிப் உள்ளிட்டவற்றையும், மாணவர்கள் அணிந்திருந்த அரைஞாண் கயிறு, கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றையும் அகற்றிய பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வெழுத மாணவர்களுடன் வந்தவர்கள் வளாகத்துக்குள் அமர்வதற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், கடும் வெயிலில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.