குமரகோட்டம் முருகன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா : மே 9-இல் தொடக்கம்
By DIN | Published On : 07th May 2019 04:16 AM | Last Updated : 07th May 2019 04:16 AM | அ+அ அ- |

குமரகோட்டம் முருகன் கோயில் வைகாசி விசாகப்பெருவிழா மே 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காமாட்சியம்மன் கோயிலுக்கும் இடையில் அமைந்துள்ளது. கடந்த 12- ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியர் என்பவரால் இக்கோயிலில் கந்தபுராணம் அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, மே 9-ஆம் தேதி இப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவையொட்டி, தினமும் காலை, மாலை இருவேளையும் முருகப் பெருமான் திருவீதியுலா நடைபெறவுள்ளது.
இதில் ஆடு, அன்னம், பூதம், யானை, குதிரை, சூரன் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் பவனி வரவுள்ளார். முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 15, 18 ஆகிய இருநாள்களிலும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, 20-ஆம் தேதி கேடயம் மங்களகிரி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.