முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
அரசு மருத்துவமனையில் துப்பாக்கி தோட்டா கண்டெடுப்பு
By DIN | Published On : 15th May 2019 04:07 AM | Last Updated : 15th May 2019 04:07 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி தோட்டா ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு துப்பாக்கி தோட்டா கிடந்ததை அவர்கள் கண்டனர். இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நேரில் வந்து, தோட்டா கிடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
இது தொடர்பாக அவர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, தோட்டா கிடந்த இடத்தைப் பார்வையிட்டனர். அந்தத் தோட்டாவை அவர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தோட்டா, காவலர்கள் துப்பாக்கியுடன் குற்றவாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது தவற விட்டதா?, மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து விழுந்ததா?, அல்லது ரௌடிகள் மருத்துவமனைக்கு வந்தபோது தவற விட்டுச் சென்றார்களா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தத் தோட்டாவை தடயவியல் ஆய்வுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.