புதிய விளையாட்டு அரங்கம் : அண்ணா பிறந்த நாளில் திறக்கப்படுமா? 

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது
புதிய விளையாட்டு அரங்கம் : அண்ணா பிறந்த நாளில் திறக்கப்படுமா? 


காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த 1975-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இந்த விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டிகள், கேரம், சதுரங்கப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்று வந்தன. டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளில் நாள்தோறும் ஈடுபட்டு வந்தனர். 
விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்க நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாடம், கடந்த சில ஆண்டுகளாக  சிதிலமடைந்திருந்தது. குறிப்பாக, படிக்கட்டுகளில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. 
அண்ணா விளையாட்டு அரங்கம்: எனவே, பழுதான கட்டடப் பகுதிகளை இடித்து, அகற்றிவிட்டு  புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு போதிய நிதியுதவி வழங்கப்பட்டு புதிதாக கட்டப்படும் என்றும், அதற்கு பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம் எனப் பெயர் சூட்டப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
ரூ.14.66 கோடி: இதைத்தொடர்ந்து, தமிழக அரசு புதிய விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ரூ.14.66 கோடி நிதி ஒதுக்கி, கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி பொக்லைன் இயந்திரம் மூலம் பழைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின. தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய விளையாட்டு அரங்கம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
அண்ணா பிறந்த நாளில் திறக்கப்படுமா?:  தற்போது, கட்டுமானப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது. 
நிகழாண்டு அண்ணா பிறந்தநாளில் புதிய விளையாட்டு அரங்கம் திறக்கப்படுமா என விளையாட்டு ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அலுவலர் ஒருவர் கூறியது: 
புதிய விளையாட்டு அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், தங்குமிடங்கள்,  ஓய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன்  உருவாகி வருகிறது. அதன்படி, முதல் தளம், இரண்டாம் தளம் என 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
தற்போது, மைதானத்தில் தடகளப் போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால், டென்னிஸ், நீச்சல், இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகிறது. 
சுமார் ரூ.15 கோடியில் உருவாகி வரும் புதிய விளையாட்டரங்கம் கட்டும் பணிகள் நிறைவடைய சுமார் 18 மாதங்கள் வரை ஆகும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்திருந்தனர். 
ஆனால், தற்போது வேகமாக நடைபெற்று வரும் பணிகளைப் பார்த்தால் வரும் செப்டம்பர் 15-இல் அண்ணா பிறந்தநாளில் புதிய விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டு விடும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். எனினும், 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கட்டுமானப்பணிகளை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் உள்ளது என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com