முதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாமில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

பொதுமக்கள் விரும்பிச் செல்லும் சுற்றுலா இடமான காஞ்சிபுரம் மாவட்டம் முதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாழைப்பழ வடிவிலான படகில் பாதுகாப்புக் கவச உடையுடன் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.
வாழைப்பழ வடிவிலான படகில் பாதுகாப்புக் கவச உடையுடன் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

பொதுமக்கள் விரும்பிச் செல்லும் சுற்றுலா இடமான காஞ்சிபுரம் மாவட்டம் முதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அரசின் சுற்றுலாத் துறை பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பராமரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்,  கோவளம் அருகேயுள்ள முட்டுக்காடு படகுத்துறை, மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. 

அவற்றில் ஒன்றாக இம்மாவட்டத்தின் தெற்கு எல்லையில், கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி, முதலியார் குப்பம் மழைத்துளி படகு குழாம் அமைந்துள்ளது. 
 சென்னையில் இருந்து 91கி.மீ. தொலைவிலும்,   மாமல்லபுரத்தில் இருந்து  42 கி.மீ.,  மேல்மருவத்தூரிலிருந்து 32 கி.மீ.,  புதுச்சேரியில் இருந்து 56 கி.மீ., மரக்காணத்தில் இருந்து 22 கி.மீ.,  கூவத்தூரில் இருந்து 10 கி.மீ.,  தொலைவிலும் மக்கள் மனங்களைக் கவர்ந்த இந்தப் படகு குழாம் அமைந்துள்ளது.

மணல் நிறைந்த கடற்கரை;  கண்ணுக்கு விருந்தளித்து,  ஆர்ப்பரிக்கும் கடலலைகள், என்றும் வற்றாத நீருடைய பக்கிங்ஹாம் கால்வாய், தூய்மையான காற்று,  மனதுக்குப் புத்துணர்ச்சியளிக்கும் சுற்றுச் சூழல் போன்ற அம்சங்களைக் கொண்ட சுற்றுலாத் தலம் முதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாம். 

ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த படகு குழாம்,  அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறது.

இதுகுறித்து படகு ஓட்டுநர்கள் கூறியது: இந்த படகு குழாமின் முகப்பில் இருந்து வங்கக் கடற்கரை நோக்கி, சுமார் 3 கி.மீ. தூரம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது.  கால்வாயை ஒட்டியுள்ள கரையோரம் தென்னை,  சவுக்கு,  தேக்கு போன்ற மரங்கள் வளர்ந்தோங்கி அடர்ந்த சோலையாகவும், குளிர்ச்சியான சூழலில் நிழல் தரும் பூங்காவாகவும் இப்பகுதி காட்சியளிக்கிறது. 

மற்ற படகு இல்லங்களைக் காட்டிலும், முதலியார் குப்பம் மழைத்துளி படகு குழாமுக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு தண்ணீரை கிழித்துக் கொண்டு செல்லும் படகுகளில் நாம் பயணம் செய்யும்போது நீர்த்துளிகள் பூப்போல நம்மீது பட்டு உடலைச் சிலிர்க்க வைக்கிறது. அதனால் தான் இங்குள்ள  படகு இல்லம் மழைத்துளி படகு குழாம் என அழைக்கப்படுகிறது.  

கடந்த 2003-ஆம் ஆண்டு, மே 13-ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்த படகு குழாம் தொடங்கி வைக்கப்பட்டது.

 தற்போது, பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளும் வகையில் இயந்திரப் படகுகள், வாழைப்பழ வடிவிலான இழுவைப் படகுகள், கால் மிதிப் படகுகள், துடுப்புப் படகுகள், ஒருவர் மட்டும் இயக்கக்கூடிய கயாக் படகுகள், அதிவேக வாட்டர் ஸ்கூட்டர்கள் போன்ற பல்வேறு வகையிலான படகுகள் செயல்பாட்டில் உள்ளன.   

படகு  குழாம் நிர்வாகிகள் கூறியது: 
இந்த படகு குழாமில் பல வகையான படகுகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்லும்போது அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கவச உடைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.  அவற்றை அணிந்த பின்பே அவர்கள் படகுப் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகிறது என்றனர். 

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியது:  படகு குழாம் முகப்பில் இருந்து வங்கக் கடற்கரை அருகே கடலலைகளை ரசித்தபடி படகில் செல்வது ரம்மியமான அனுபவம். சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க தென்னங்கீற்றால் வேயப்பட்ட சிறு குடில்களை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அமைத்துள்ளது மிகப் பயனுள்ளது.

சென்னை கோயம்பேடு, கல்பாக்கம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் அரசின் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இங்குள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் நின்றுசெல்வதில்லை. அவ்வாறு அரசு பேருந்துகள் நின்றுசென்றால் இன்னும் அதிகப் படியான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்வார்கள். ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் வந்து செல்லும் இப்படகு குழாமில் போதிய உணவு விடுதிகளும், தங்குமிடங்களும், கழிப்பறை வசதிகளும் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றனர்.

தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அரசுக்கும் வருவாய் உயரும். 


படகுகளின் விவரங்கள்...

 2 இருக்கைகள் கொண்ட  பெடல் படகு,   4, 6, 8  இருக்கைகள் கொண்ட மோட்டார் படகு,   ஒரு, இரண்டு இருக்கைகள் கொண்ட கயாக் படகு,  2 இருக்கைகள் கொண்ட வாட்டர் ஸ்கூட்டர், 6 இருக்கைகள் கொண்ட ஸ்கூட்டர் படகு, 6 இருக்கைகள் கொண்ட  வாழைப்பழ வடிவிலான படகு ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காகக் காத்திருக்கின்றன. இதற்காக மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com