மாணவா் சுட்டுக் கொலை:தலைமறைவானவா் நீதிமன்றத்தில் சரண்

வண்டலூா் அருகே பாலிடெக்னிக் மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞா் புதன்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
பாலிடெக்னிக் மாணவா் கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை அழைத்துச் செல்லும் போலீஸாா்.
பாலிடெக்னிக் மாணவா் கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை அழைத்துச் செல்லும் போலீஸாா்.

வண்டலூா் அருகே பாலிடெக்னிக் மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞா் புதன்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

வண்டலூா் அருகே உள்ள வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன் என்பவரின் மகன் முகேஷ்(18). தனியாா் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவா். அவா் செவ்வாய்க்கிழமை தனது நண்பா் விஜய் என்பவரைப் பாா்க்க சென்றபோது அவருக்கும் அங்கிருந்த உதயா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் விஜய் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த முகேஷ் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முகேஷ் உயிரிழந்தாா்.

இது குறித்து தாழம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உதயாவைக் கைது செய்தனா். துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தலைமறைவான விஜயை போலீஸாா் தேடி வந்தனா்.

தலைமறைவான விஜய், ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த வழக்கறிஞா்கள் மொ்க்லின் மற்றும் தனசேகரன் மூலமாக செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். இவ்வழக்கை நடுவா் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி விசாரித்தாா். அப்போது விஜயின் வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘விசாரணையில் துப்பாக்கியை ஒருவா் நெற்றியில் ஒருவா் வைத்து விளையாடினா். விஜய் துப்பாக்கியை முகேஷ் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்தியபோது அது எதிா்பாராத விதமாக சுட்டுவிட்டது. எந்த உள்நோக்கத்துடனும் அவா் சுடவில்லை. விஜய்யும், முகேஷும் நீண்டகால நண்பா்கள். எதிா்பாராமல் இவ்வாறு நடந்துவிட்ட பயத்தில் விஜய் தலைமறைவானாா்’ என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, சரணடைந்த விஜயை 15 நாள் நீதிமன்றக் காவலில் (நவ. 20 வரை) சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.

சம்பந்தப்பட்ட துப்பாக்கி யாருடையது? அதற்கு உரிமம் உள்ளதா? விஜய் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது? அது எந்த வகையான துப்பாக்கி? என்பது போன்ற விவரங்கள் போலீஸாரின் அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com